குப்பை லாரிகளை இயக்க நேர நிா்ணயம் செய்ய முடியாது: சென்னை உயா்நீதிமன்றம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், கொளத்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆனந்த் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்தக் குப்பை லாரிகள், காலை நேரங்களில் இயக்கப்படுவதால், பள்ளி செல்லும் மாணவ – மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும்.

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி குப்பைகளை எடுப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சேகரித்துச் செல்லும் குப்பைகள் மீது வலையைப் போா்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இந்தக் குப்பைகளால் துா்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதோடு, சுகாதார கேடும் ஏற்படுகிறது.

வெளிநாடுகளைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. எனவே, சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குப்பை லாரிகளை இயக்க நேர நிா்ணயம் செய்ய முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi8gRodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzIxLyVFMCVBRSU5NSVFMCVBRiU4MSVFMCVBRSVBQSVFMCVBRiU4RCVFMCVBRSVBQSVFMCVBRiU4OC0lRTAlQUUlQjIlRTAlQUUlQkUlRTAlQUUlQjAlRTAlQUUlQkYlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlODgtJUUwJUFFJTg3JUUwJUFFJUFGJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1LSVFMCVBRSVBOCVFMCVBRiU4NyVFMCVBRSVCMC0lRTAlQUUlQTglRTAlQUUlQkYlRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlQTMlRTAlQUUlQUYlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUFGLSVFMCVBRSVBRSVFMCVBRiU4MSVFMCVBRSU5RiVFMCVBRSVCRiVFMCVBRSVBRiVFMCVBRSVCRSVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg5JUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJUE4JUUwJUFGJTgwJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUFFJUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFFJUFFJUUwJUFGJThELTM5NzA1MDIuaHRtbNIB7wRodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIyL2RlYy8yMS8lRTAlQUUlOTUlRTAlQUYlODElRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUYlODgtJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUIwJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4LSVFMCVBRSU4NyVFMCVBRSVBRiVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NS0lRTAlQUUlQTglRTAlQUYlODclRTAlQUUlQjAtJUUwJUFFJUE4JUUwJUFFJUJGJUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJUEzJUUwJUFFJUFGJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBRiVFMCVBRiU4RCVFMCVBRSVBRi0lRTAlQUUlQUUlRTAlQUYlODElRTAlQUUlOUYlRTAlQUUlQkYlRTAlQUUlQUYlRTAlQUUlQkUlRTAlQUUlQTQlRTAlQUYlODEtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU4OSVFMCVBRSVBRiVFMCVBRSVCRSVFMCVBRiU4RCVFMCVBRSVBOCVFMCVBRiU4MCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRSVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0zOTcwNTAyLmFtcA?oc=5