சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விமான கட்டணங்களும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை கொண்டாட்டமாகவும் மாறி உள்ளது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏராளமானோர் விமானங்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்திய சுற்றுலா தலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் கோவாவில் தான் அதிக அளவில் பயணிகள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டும் கோவாவுக்கு செல்வதற்கு விமானங்களில் முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து கோவாவிற்கு செல்வதற்கான விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது. அது போல கோவாவில் இருந்து ஜனவரி முதல் வாரத்தில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் 4 மடங்கு உயந்துள்ளது.

சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்ல வழக்கமாக ரூ.4,400 கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது பயணிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதால் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

டிசம்பர் 23, 24-ந்தேதிகளில் அனைத்து விமான இருக்கைகளும் நிரம்பி விட்டன. அதுபோல ஜனவரி 1, 2-ந்தேதிகளிலும் விமானங்களில் டிக்கெட் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

கோவாவில் இருந்து சென்னை தவிர டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களுக்கும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtY2hlbm5haS10by1nb2EtcGxhbmUtY2hhcmdlLWhpa2UtNTUwODMz0gFdaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtY2hlbm5haS10by1nb2EtcGxhbmUtY2hhcmdlLWhpa2UtNTUwODMz?oc=5