சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

திருவொற்றியூர்,

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி, மின்கட்டண உயர்வை கண்டித்து மணலி பாடசாலை தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.குப்பன் தலைமை தாங்கினார். பகுதி அவைத்தலைவர் சாரதி பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் பா.ராஜேந்திரன், பகுதி துணைத்தலைவர் எம்.ஜோசப், கவுன்சிலர்கள் டாக்டர் கே.கார்த்திக், ஸ்ரீதர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர். முடிவில் சாக்ரட்டீஸ் நன்றி கூறினார்.

ஆலந்தூர்

ஆலந்தூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜசேகர், பரணிபிரசாத் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

பெருங்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.கந்தன் தலைமையிலும், மடிப்பாக்கம் கூட்ரோட்டில் முன்னாள் கவுன்சிலர் வி.குமார் தலைமையிலும், வேளச்சேரி பகுதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.கே.அசோக் தலைமையிலும், பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகம் அருகே முன்னாள் துணை தலைவர் தேன்ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழ்கட்டளையில் முன்னாள் நகரமன்ற துணை தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ப.தன்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தாம்பரம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வியாசர்பாடி சர்மா நகரில் வடசென்னை பெரம்பூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் என்.எம். பாஸ்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், முன்னாள் எம்.பி. விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9hZG1rLWluLXRoZS1zdWJ1cmJzLW9mLWNoZW5uYWktcHJvdGVzdC04NjI5MjbSAVlodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL2FkbWstaW4tdGhlLXN1YnVyYnMtb2YtY2hlbm5haS1wcm90ZXN0LTg2MjkyNg?oc=5