தமிழகத்தில் டிசம்பர் 25இல் கனமழைக்கு வாய்ப்பு! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகையில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் தெற்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன்காரணமாக இன்று (22.12.2022 முதல் 24.12.2022) வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது நான் இருந்தபோது கொடுத்த கணக்குத்தான்: ஓபிஎஸ் தகவல்!
அதேபோல், டிசம்பர் 26ஆம் தேதியன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimQFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL3N0YXRlLW5ld3MvaGVhdnktcmFpbi1jaGFuY2VzLW9uLWNocmlzdG1hcy1jaGVubmFpLW1ldHJvbG9neS1kZXBhcnRtZW50LXRhbWlsbmFkdS1mb3JlY2FzdC9hcnRpY2xlc2hvdy85NjQyNDc3OS5jbXPSAZ0BaHR0cHM6Ly90YW1pbC5zYW1heWFtLmNvbS9sYXRlc3QtbmV3cy9zdGF0ZS1uZXdzL2hlYXZ5LXJhaW4tY2hhbmNlcy1vbi1jaHJpc3RtYXMtY2hlbm5haS1tZXRyb2xvZ3ktZGVwYXJ0bWVudC10YW1pbG5hZHUtZm9yZWNhc3QvYW1wX2FydGljbGVzaG93Lzk2NDI0Nzc5LmNtcw?oc=5