சென்னை: போலி என்.ஐ.ஏ அதிகாரிகள்; கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்! – இன்ஃபார்மர் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா. இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தன்னுடைய 20 லட்சம் ரூபாயை என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி எடுத்துசென்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலி என்.ஐ.ஏ அதிகாரிகளை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலி என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்த ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த காஸ் டெலிவரி பாயாகப் பணியாற்றிவரும் புஷ்பராஜ் மற்றும் வீரா (எ) விஜயகுமார், சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஆட்டோ டிரைவர் தேவராஜ், ரவி ஆகிய 6 பேர் சரணடைந்தனர். அவர்களை முத்தியால்பேட்டை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “முகமது அப்துல்லா என்பவர் சுமார் 20 லட்சம் ரூபாயை என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி சிலர் எடுத்துச் சென்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், போலீஸ் காவலில் எடுத்தவர்களிடம் விசாரித்தபோது 2 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தனர். அது தொடர்பாக முகமது அப்துல்லாவிடம் விசாரித்தோம். இதற்கிடையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக முகமது அப்துல்லாவிடம் அதிகளவில் பணம் இருக்கும் தகவலை அவரிடம் வேலைப்பார்ப்பவர்கள் மூலமே வேலு தெரிந்திருக்கிறார். மேலும் இந்தக் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாகவும் இன்ஃபார்மராகவும் சித்திக் என்பவர் இருந்திருக்கிறார். அதனால் அவரைக் கைது செய்திருக்கிறோம். இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்திருக்கிறோம். மீதமுள்ள பணம் இரண்டு பேரிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.

முன்னதாக, வழக்கில் சிக்கிய பா.ஜ.க-வைச் சேர்ந்த கார்த்திக், வேலு ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.

போலி என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்தவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் தினந்தோறும் புதுபுதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiamh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvY2hlbm5haS1wb2xpY2UtYXJyZXN0ZWQtb25lLW1vcmUtcGVyc29uLWluLWZha2UtbmlhLW9mZmljZXJzLWZyYXVkLWNhc2XSAXRodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9jaGVubmFpLXBvbGljZS1hcnJlc3RlZC1vbmUtbW9yZS1wZXJzb24taW4tZmFrZS1uaWEtb2ZmaWNlcnMtZnJhdWQtY2FzZQ?oc=5