சென்னையில் 2ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் எப்படி இயங்கும்: அதிகாரிகள் தகவல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில்  விமான நிலையம் – விம்கோ  நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் –  சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ  தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது.

மாதவரம் – சிறுசேரி வரை அமைய கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரெயில்  நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மெட்ரோ  ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள்  குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது. 35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல்  ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூரில் மெட்ரோ  ரெயில் 3 அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்டமிட்டு உள்ளது.

மயிலாப்பூர் பகுதியில் அமைய உள்ள மெட்ரோ சுரங்கபாதை பணிகள் கடினமான பாறையில் சவாலான வகையில் அமைய உள்ளது. இந்த சுரங்க பாதைகள் அடுக்கு சுரங்கமாக ஒன்றன் பின் ஒன்றாக கீழே இருந்து கட்டப்பட உள்ளது. 4 ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெறும். 2026ம் ஆண்டில் மெட்ரோ ரெயில் 2வது கட்ட பணிகள் முடிந்து பொதுமக்கள் விரைவு சேவைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் என்னென்ன வசதிகள் உள்ளன. இந்த ரயில் சேவை எப்படி இயங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க சிக்னல், கட்டுப்பாடு மற்றும் காணொளி மேலாண்மை அமைப்பு  நிறுவப்படவுள்ளது. தொலைத்  தொடர்பு அடிப்படையில் இயங்கும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும். இந்த அமைப்பு நிறுவப்பட்ட உடன் பல்வேறு சோதனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இந்த அமைப்பு ரயில்களுடன் ஒங்கிணைப்பு செய்யப்படும். இதற்கு பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்த உடன் ரயில்களை இயக்கும் பணி தொடங்கும். இந்த சிக்னல் அமைப்பு மூலம் 1.30 நிமிட இடைவெளியில் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்க  முடியும்.

* டிரைவர் இல்லாத மெட்ரோ சேவையில் ரயில் புறப்படுவது, 2 நிலையங்களுக்கு இடையிலான ரயிலின் இயக்கம், அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவது, கதவுகளை திறப்பது, மூடுவது என அனைத்தும்  தானியங்கி முறையில்  நடைபெறும்.
*கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணிணி, வழித்தடத்தில் உள்ள கணிணி, ரயிலில் உள்ள கணிணி மூன்றும் இணைந்து இந்த டிரைவர் இல்லா பயணத்தை வழி நடத்துகின்றன.
* ரயில்  நிலையம் மற்றும் தண்டவாளம் பற்றிய தகவல்களை வழித்தடத்தில் உள்ள கணிணி கட்டுப்பாட்டு மையத்தோடு பகிர்ந்து கொள்கிறது. 2 கணிணிகளும் தரும் தகவல்களின் அடிப்படையில் ரயிலில் உள்ள கணிணி ரயிலை இயக்குகிறது.
* ஒரு நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய பின்னர் கதவு மூடப்படும். ரயிலின் அனைத்து கதவுகளும் மூடாவிட்டால் ரயில் புறப்படாது.
* ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டிருக்கும்.
* தண்டவாளத்தில் ஏதேனும்  ஒரு பொருளோ அல்லது நபரோ விழுந்து விட்டால் அதுகுறித்த தகவலை வழித்தடத்தில் உள்ள கணிணி அனுப்ப, உடனடியாக ரயில் நிற்கும்.
* அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் பயணிகள் தொடர்புகொள்ளும் வசதி செய்யப்பட்டிருக்கும். அவசர கால பிரேக்கை பயணி ஒருவர் பயன்படுத்தினால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரயிலில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும்.
* ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் கூடுதல் ரயில்களை அந்த வழித்தடத்தில் இயக்க முடியும்.
* இத்தனை நவீன வசதிகள் கொண்டிருந்தாலும் தற்போதைக்கு டிரைவர் இல்லா ரயிலின் இயக்கத்தை கண்காணிக்க ஒரு டிரைவர் ரயிலில் இருப்பார். குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் முழுமையான தானியங்கி ரயில் சேவையாக இயங்கும்,’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
* உலகெங்கிலும் 46 நகரங்களில் சுரங்கப்பாதை ரயில்கள் இயங்கி வருகின்றன. உலகின் முதல் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை 1981ம் ஆண்டில் ஜப்பானில் கோஸ்ட் நகரில் தொடங்கப்பட்டது.

* ரூ.946 கோடியில் ஒப்பந்தம்
இந்த திட்டத்திற்குகாக டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரெயில்களை (78 பெட்டிகள்) தயாரிப்பதற்காக  ‘அல்ஸ்டோம்  டிரான்ஸ்போர்ட்’ இந்தியா நிறுவனத்துக்கு ரூ.946 கோடியே 92 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு வழங்குகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2024ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும், என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

* டெல்லியில் முதல் சேவை
நாட்டிலேயே தானியங்கி மெட்ரோ ரயில் சேவை முதன்முறையாக டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் சமீபத்தில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா வரை சுமார் 37 கி.மீ நீளத்திற்கு இந்த ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் மெட்ரோ ரயிலில் புதிய அனுபவத்தை மக்கள் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பான சேவையாக அமையும் என்றும் ஒரே பாதையில் 2 ரயில்கள் வரும் பட்சத்தில் ரயில்கள் தானாகவே நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjQ3MzPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNDczMy9hbXA?oc=5