ஐபிஎல் மினி ஏலம் 2023: `அப்போ வலிமை அப்டேட்… இப்போ துணிவு’ – சென்னை அணியின் ட்வீட்! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம் பல ட்விஸ்ட்களுக்கு இடையில் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், கேப்டன் பொறுப்பை மனதில் வைத்து சென்னை அணி இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரும், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி குறித்து சென்னை அணி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

எதிர்வரும் 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம், கேரள மாநிலம் கொச்சியில் நேற்று மதியம் துவங்கியது. இதில் யாரும் எதிர்பாராத வகையில், பலத்த போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை ரூ. 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியது. இதேபோல், ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீனை, ரூ. 17.5 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரும், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு சென்னை அணி விலைக்கு வாங்கியது. சென்னை அணியில், வரும் ஐபிஎல் தொடருடன் 41 வயதான தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு மாற்றாக திறமை வாய்ந்த வீரரை தேர்வு செய்யும் பொருட்டு, 31 வயதான பென் ஸ்டோக்ஸை சென்னை அணி விலைக்கு வாங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ்தான் அதிக விலையில் உள்ளார். அவருக்கு அடுத்ததாகத்தான் ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடியில் உள்ளார். தீபக் சாஹர் ரூ. 14 கோடியிலும், கேப்டன் தோனி ரூ. 12 கோடியிலும் உள்ளனர். இந்நிலையில், பென் ஸ்டோக்ஸை சென்னை அணி விலைக்கு வாங்கியதும் மற்றொரு இங்கிலாந்து வீரரும், சென்னை அணியின் ஆல் ரவுண்டருமானமொயின் அலி, தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவேற்கிறோம் சாம்பியன்” என ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அப்போது வலிமை அப்டேட், இப்போது ‘துணிவு’ ஆக வாங்கிவிட்டோம்” என பதிவிட்டுள்ளது. இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின்போது, பவுண்டரி லைனில் ஃபீல்டிங்கில் நின்ற மொயின் அலியிடம், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித்தின் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் நடிப்பில் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு, ‘துணிவு’ படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாக உள்ளதை சென்னை அணி பயன்படுத்திக்கொண்டுள்ளது. இதேபோல் ரஜினியின் ‘அண்ணாமலை’ பட புகைப்படத்தை பகிர்ந்து, சென்னை அணி ட்வீட் செய்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaGh0dHBzOi8vd3d3LnB1dGhpeWF0aGFsYWltdXJhaS5jb20vbmV3c3ZpZXcvMTUyODU3L0lQTC1BdWN0aW9uLTIwMjMtY2hlbm5haS1zdXBlci1raW5ncy10d2VldC1nb2VzLXZpcmFs0gFraHR0cHM6Ly93d3cucHV0aGl5YXRoYWxhaW11cmFpLmNvbS9hbXAvYXJ0aWNsZS8xNTI4NTcvSVBMLUF1Y3Rpb24tMjAyMy1jaGVubmFpLXN1cGVyLWtpbmdzLXR3ZWV0LWdvZXMtdmlyYWw?oc=5