அருங்காட்சியகம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் விக்டோரியா மஹால் ரூ.29 … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: அருங்காட்சியகம் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சி நடத்தும் வகையில் ரூ.29 கோடியில் விக்டோரியா மஹாலை புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்ட வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள விக்டோரியா மஹால் 140 ஆண்டுகள் பழமையானது. 1882ல் சென்னையில் வசித்து வந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி, மெட்ராஸ் நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். 1883ல் பீப்பிள்ஸ் பார்க் என்ற பகுதியில் இருந்து 3.14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீபவுசபதி அனந்த கஜபதி ராஜூ கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

இது, இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலை பணியில் கட்டப்பட்டது. இதை ராபர்ட் சிசோமால் ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையால் வடிவமைக்கப்பட்டு, நம்பெருமாள் செட்டியாரால் 1888 முதல் தொடங்கி 1890 கட்டி முடிக்கப்பட்டது.  1888 ஜனவரியில் நடந்த, நகர மக்கள் கூட்டத்தில், மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டிடத்திற்கு விக்டோரியாக மகாராணி பொது மண்டபம் என பெயரிடப்பட்டது. 2021-22ம் ஆண்டு பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் பழமை வாய்ந்த விக்டோரியா கட்டிடம் அதன் தொன்மை மாறாமல் பொலிவுடன் புனரமைக்கப்படும் என அறிவித்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:
‘‘விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளிக்கும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா பொதுக்கூடத்தை புதுப்பிக்கும் பணிகளில் கட்டிடத்தை மறுசீரமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகர அருங்காட்சியகம் அமைத்தல், நினைவு பரிசு அங்காடிகள் அமைத்தல் மற்றும் கட்டிடத்திற்கு வெளியே புல் தரைகளை அமைத்தல் போன்ற பணிகள் அடங்கும்.

ஜனவரி மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும் விக்டோரியா பொதுக்கூடத்திற்கான புனரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கையில் அதன் முழுமையான உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் (பொது), தலைமைப் பொறியாளர் (கட்டிடம்), தலைமைப் பொறியாளர் (திட்டம்), செயற்பொறியாளர் (கட்டிடம்), செயற்பொறியாளர்(திட்டம்), சென்னை சீர்மிகு நகரத் திட்ட முதன்மைச் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் கண்காணிப்பாளர், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், சென்னை இந்திய தொழில் நுட்ப கழக பேராசிரியர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைவர்கள் உரையாற்றிய பெருமை
விக்டோரியா பப்ளிக் ஹாலில் மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், சர்தார் வல்லபாய் பட்டேல், கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்டோர் உரையாற்றியுள்ளனர்.

முதல் சினிமா திரையிடல்
சென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமை உண்டு. மெட்ராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி ஸ்டீவன்சன் என்பவர் 1896ல்10 குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகள் திரையிட்டார்.

கட்டிடம் எப்படி?
இத்தாலிய பாணி கோபுரத்தின் உச்சியில் திருவிதாங்கூர் கூரையுடன், செந்நிற சீன செராமிக் கற்களால் கட்டப்பட்ட மூன்றடுக்கு மன்றமாக நின்று கொண்டிருக்கிறது. தரைதளம் கட்டிடமானது 13,342 சதுர அடி பரப்பளவிலும், முதலாவது தளமானது 12,541 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு பெரிய கூடங்களாக ஒவ்வொன்றிலும் 600க்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். அதனுடன் 200 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரக்கூடியதாக மரத்தால் அமைக்கப்பட்ட காட்சியகம் அமைந்துள்ளது.

மக்கள் பயன்படுத்த அனுமதி
மஹாலில் மிகப்பெரிய அரங்கம் உள்ளதால் பொதுமக்கள் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU0MzbSAQA?oc=5