சென்னை: திருமணமான 7 மாதங்களில் கர்ப்பிணி மர்ம மரணம்! – போலீஸ் விசாரணை – Vikatan

சென்னைச் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டம, சோழிங்நல்லூர், பெருங்குடியைச் சேர்ந்தவர் ராணி. இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் பெயர் தேவசகாயம். எங்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். என்னுடைய மகள் பிரதீபா (24) என்பவரை ஜேம்ஸ் என்பவருக்கு கடந்த 17.5.2022-ம் தேதி திருமணம் செய்து கொடுத்தோம். இவர்களின் திருமணம் திண்டிவனத்தில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு பிரதீபாவும் ஜேம்ஸும் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எஃப் காலனியில் குடியிருந்து வந்தனர். திருமணமான நாளிலிருந்து சீர் செய்முறையில் எங்களுக்குள் பிரச்னை இருந்து வந்தது. அதனால் நாங்கள் என் மகளின் வீட்டுக்கு நேரில் செல்லாமல் இருந்து வந்தோம்.

திருமணம் (மாதிரிபடம்)

தற்போது என்னுடைய மகள் பிரதீபா, நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தாள். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பிரதீபா, எங்களைப் பார்க்க வீட்டுக்கு வந்து சில தினங்கள் தங்கியிருந்தாள். கடந்த 21.12.2022-ம் தேதி மருமகன் ஜேம்ஸ், என்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25) மருமகன் ஜேம்ஸ் எங்களுக்கு போன் செய்து பிரதீபா, வீட்டின் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டாள். அதனால் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறோம் என்று கூறினார். உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது பிரதீபா இறந்துவிட்டதாகக் கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தோம். பிரதீபாவுக்கு என்ன நடந்தது என்று மருமகன் ஜேம்ஸிடம் விசாரித்தபோது அவர், பிரதீபா காலை 9:30 மணியளவில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். மருமகன் ஜேம்ஸ் சொல்லும் காரணத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. மேலும் எனது மகள் பிரதீபாவின் மரணத்தில் சந்தேகமாக உள்ளது. எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருவள்ளூவர், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.

இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கூறுகையில், “கர்ப்பிணி பிரதீபா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரின் கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். பிரதீபாவுக்கு திருமணமாகி ஏழு மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஆர்.டி.ஓ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcHJlZ25hbnQtbGFkeS1zdXNwaWNpb3VzLWRlYXRoLWluLWNoZW5uYWktcG9saWNlLWludmVzdGlnYXRpb24tZ29lcy1vbtIBc2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2FtcC9zdG9yeS9uZXdzL2NyaW1lL3ByZWduYW50LWxhZHktc3VzcGljaW91cy1kZWF0aC1pbi1jaGVubmFpLXBvbGljZS1pbnZlc3RpZ2F0aW9uLWdvZXMtb24?oc=5