சென்னை துறைமுகம்-மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணி 3 மாதத்தில் தொடங்க முடிவு – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.

பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. நீர்வளத்துறைக்கும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் 2012-ல் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

2015-ம் ஆண்டு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த நிதின் கட்கரி இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்க முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து 2019-ல் இத்திட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய மந்திரி நிதின் கட்கரி இத்திட்டத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திடம் மறுவடிவமைப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி இத்திட்டம் புதிய வடிவில் செயல்படுத்த இறுதி செய்யப்பட்டது. 2 அடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இதை தொடர்ந்து புதிய 2 அடுக்கு மேம்பாலத்திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் அடிக்கல் நாட்டுகிறார்.

புதிய திட்டத்தின் படி சில மாற்றங்கள் செய்து செயல்படுத்தப்படுகிறது. சென்னை துறைமுகம்- மதுரவாயல் இரண்டு அடுக்கு மேம்பாலத் திட்டம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அத்துறையின் அதிகாரிகள் கூறியதாவது:-

துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலத் திட்டம் ரூ.5,855 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

20.6 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பிரதம மந்திரியின் கதி சக்தி திட்டத்தின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையில் 4 வழியாக கனரக வாகனங்கள் செல்லும் வகையில் அமைய உள்ளது. இதற்கான டெண்டர் ஜூலை மாதம் விடப்பட்டது. ஆனால் கடலோர ஒழுங்கு முறை மண்டல அனுமதி மற்றும் ஒப்புதலுக்காக இந்திய ரெயில்வே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் டெண்டர் இறுதி செய்ய முடியவில்லை.

மேலும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையில் 2 இடங்களில் ரெயில் பாதைகள் கடப்பதால் இந்திய ரெயல்வே ஒப்புதல் அளிக்க வேண்டும். விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும். இந்த இரண்டு சிக்கலுக்காக ஏலத்தை நீட்டித்து இருக்கிறோம். இந்த நிதி ஆண்டிற்குள் தேர்வு செய்ய ஒப்பந்ததாரருடன் கையெழுத்தாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த மேம்பால திட்டப்பணி 4 தொகுதிப்புகளாக அமைக்கப்படும் 12 கி.மீ தூரத்திற்கு இரட்டை அடுக்கு வழித்தடமாக அமைகிறது. உயர்த்தப்பட்ட மேம்பாலத்தினால் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் கார் பயணிகளையும் 6500 கனரக டிரைவர் லாரிகளையும் கையாள முடியும்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtaGFyYm91ci1tYWR1cmF2b3lhbC1wb3J0LWVsZXZhdGVkLWV4cHJlc3N3YXktd29yay1zdGFydC1uZXh0LTMtbW9udGgtNTUzNTQz0gGBAWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLWhhcmJvdXItbWFkdXJhdm95YWwtcG9ydC1lbGV2YXRlZC1leHByZXNzd2F5LXdvcmstc3RhcnQtbmV4dC0zLW1vbnRoLTU1MzU0Mw?oc=5