போலி ஆவணங்கள் மூலம் துபாயில் குடியேறிய தொழிலதிபரின் ரூ.11.90 கோடி … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் துபாயில் குடியேறிய தொழிலதிபருக்கு சொந்தமான வீடு  மற்றும் லாக்கரில் இருந்த நகைகள் என மொத்தம் ரூ.11.90 கோடி சொத்துக்களை அபகரித்த வீட்டின் வேலைக்காரரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் சூளைமேடு ‘கில்’ நகர் 2வது தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன் (37) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், வில்லிவாக்கத்தில் பவர் ஏஜென்ட் ஆப் கே.பி.ஜெயராம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறோம். இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்து வந்தோம். எங்கள் நிறுவனத்துக்கு ஆலோசகராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி ஒருவர் இருந்தார்.

அவர் ஆலோசனை படியே நாங்கள் டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தி வந்தோம். இதற்கிடையே எனது வீட்டில் வேலை செய்வதற்காக நண்பர் கிருஷ்ணன் மூலம் சரவணன் என்பவர் அறிமுகமானார். எங்களின் நம்பிக்கையான நபராக அவர் இருந்தார். நாங்கள் தொழில் தொடர்பாக அடிக்கடி சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு  சென்று வருவது வழக்கம். நாங்கள் ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து, என்னிடமும், என் மனைவியிடமும் சரவணன் நம்பிக்கை பெற்றார். இதனால், வேலைக்காரர் சரவணனுக்கு நிதி நெருக்கடியில் இருந்தபோது பல லட்சங்களை கொடுத்து உதவினோம். திடீரென தொழிலில் நெருக்கடி ஏற்பட்டு, சில காலங்கள் தொழிலை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.  இதை பயன்படுத்தி, ‘எங்கள் மீது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பொய் புகார்கள் மூலம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதன் காரணமாக நாங்கள் 2005ம் தேதி இந்தியாவில் இருந்த எங்கள் அனைத்து தொழில்களையும் மூடிவிட்டு துபாய்க்கு குடிபெயர்ந்தோம்.அந்த காலக்கட்டத்தில் சூளைமேடு பகுதியில் உள்ள பங்களா வீடு மற்றும் சென்னையில் பல இடங்களில் உள்ள எனது  வீடுகளை விட்டுவிட்டு அனைத்தையும் வேலைக்காரர் சரவணனை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றேன். சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு எனது மாமாவுக்கு பவர் வழங்கி இருந்தோம். அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், எங்கள் குடும்ப நிலைமைகள் அனைத்தும் வேலைக்காரர் சரவணன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு நன்றாக தெரியும், அதேநேரம், நாங்கள் துபாயிக்கு குடிபெயர்ந்ததால் சென்னைக்கு வரமுடியாக நிலை இருந்தது.

அதை சவரணன் மற்றும் அவரது நண்பர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சரவணன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் எனது மாமா பெயரில் உள்ள நிலத்தின் பவரை தங்களது பெயருக்கு போலி ஆவணம் மூலம் மாற்றியுள்ளனர். அதோடு வீட்டில் இருந்த எனது மனைவியின் காசோலைகளில் சரவணன் போலி கையெழுத்து போட்டு, நில பத்திரத்தை உருவாக்கியுள்ளனர். பிறகு  எனது காலி மனையில் 16 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதை அவர்கள் பல கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். பெரும்புதூர் கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளனர். நாங்கள் துபாய்க்கு செல்வதற்கு முன்பு எங்கள் வீட்டில் 14 வாகனங்கள் இருந்தது. அந்த வாகனங்களை போலி ஆவணங்கள் மூலம் ரூ.85 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

மேலும், எங்கள் வீட்டின் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை எடுத்துள்ளனர். பிறகு இந்த நகைகளை பைனான்சியர் கவுதம் சந்த் ஜெயின் என்பவரிடம் அடகு வைத்துள்ளனர். 2006ம் ஆண்டில், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு எதிராக டிஆர்டியில் வழக்கு நடத்துவதற்காக சரவணனை நியமித்தோம். ஆனால் இந்த இடத்தை இவர்கள் போலியான நபர்களை வைத்து ஏலம் எடுத்துள்ளனர்.அந்த வகையில் இதுவரை சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து ரூ.11.90 கோடி சொத்துக்களை அபகரித்து ஏமாற்றியுள்ளனர்.

எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் மீதான வழக்கறிஞரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக, போலி ஆவணங்களை உருவாக்கி, கிரிமினல் நம்பிக்கை மீறல், ரூ.11,90 ேகாடி செய்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி நடவடிககை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். பிறகு மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜசேகரன் விசாரணை நடத்த கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் ராஜசேகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

அதில், தொழிலதிபர் துபாய்க்கு குடிபெயர்ந்த போது, அவரது நிறுவனத்தின் ஆலோசகரான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவியின், தூண்டுதலின் பெயரில் வேலைக்காரராக பணியில் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் இணைந்து தொழிலதிபரின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தும், வீட்டில் உள்ள லாக்கரை உடைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருடியதும் தெரியவந்தது. அதோடு இல்லாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை வங்கிகள் மூலம் ஏலம் விடவைத்து அதை தங்களது பினாமி பெயரில் வாங்கி மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொழிலதிபர் வீட்டில் வேலைக்காரனாக பணியில் சேர்ந்து போலி ஆவணங்கள் மற்றும் பல்வேறு மோசடிகள் மூலம் ரூ.11.90 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்த சரவணனை மற்றும் அவரது நண்பர்கள் மீது  ஐபிசி 406, 409, 420, 34 சட்டப்பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக உள்ள மற்றவர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjUzOTXSAQA?oc=5