விடுமுறை முடிந்து சென்னை வருவதற்கான ஜனவரி 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்து கட்டணம் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயருகிறது. பண்டிகையின் போது அளிக்கப்படும் தொடர் விடுமுறையின் போது பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பொதுமக்கள் செல்ல ஏதுவாக அரசுத் தரப்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.  இருப்பினும் தனியார் பேருந்துகள் இந்த சமயத்தை பயன்படுத்தி கட்டண உயர்வை மக்கள் தலையில் வெறும் சுமையாக சுமத்துகின்றனர்.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி தொடர் விடுமுறையின் காரணமாக பொதுமக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இந்நிலையில் விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ரூ.700 முதல் ரூ.1000 என்ற வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில்  ஜனவரி 1ம் தேதி ரூ.2,900 வரை அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.1300 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ம் தேதி ரூ.3000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் இருந்து சென்னை திரும்ப சுமார் ரூ.2400-2700 என்ற வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்  ஜன.1ல் ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை உயர்த்தப்பட்டு கட்டண கொள்ளை அரங்கேறியுள்ளது. மதுரை கோவை நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது சென்னை திரும்ப முன்பதிவு செய்தவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MjU0NzfSAQA?oc=5