சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்பும் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், மதுரையில் இருந்து சென்னை திரும்ப ரூ.2,900, அதேபோல கோவைக்கு ரூ.3,000, நெல்லைக்கு ரூ.3,000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரணம், ரயில், அரசு பஸ்களில் சீட் நிரம்பிவிட்டது. எனவே, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணம் உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களின் முக்கிய தலைநகரில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அரையாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதனால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் ஜனவரி 1ம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு திரும்பி வர உள்ளனர். பலர் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்துவிட்டனர். அப்படி முன்பதிவு செய்யாத பொதுமக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அவர்கள் அவசர அவசரமாக தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக சென்னைக்கு வர வேண்டி உள்ளது. எனவே, இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திவிட்டனர். குறிப்பாக மதுரையில் இருந்து சென்னை வர வழக்கமான கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000. ஆனால், மக்களின் அவசரத்தை புரிந்து கொண்ட பஸ் உரிமையாளர்கள் மதுரை-சென்னைக்கு ரூ.2,500 முதல் ரூ.2,900 வரை உயர்த்தி உள்ளனர். கோவையில் இருந்து சென்னைக்கு பழைய கட்டணம் ரூ.1,300 என்றாலும், பண்டிகை காலத்தையொட்டி ரூ.3,000 வரை வசூலிக்கின்றனர்.
நெல்லையில் இருந்து வர வழக்கமான கட்டணம் ரூ.2,400. ஆனால், ஜன. 1ம் தேதி ரூ.3,500 முதல் ரூ.4,500 வரை உயர்த்தி உள்ளனர். சென்னையிலிருந்து வெளியூர் செல்ல கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதேபோல நெல்லை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும், ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU2OTbSAQA?oc=5