சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தியது செல்லும்: உயா் நீதிமன்றம் உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீா்மானங்களும் செல்லும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயா்த்துவது தொடா்பாக தமிழக அரசு கடந்த மாா்ச் 30-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடா்ச்சியாக கடந்த மே 30-ஆம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயா்த்துவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த அரசாணையையும், மாநகராட்சி தீா்மானத்தையும் எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், ‘சொத்து வரி உயா்வு தொடா்பாக மாநகராட்சிதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, அரசு தீா்மானிக்க முடியாது. மத்திய நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் மாநகராட்சி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை’ என வாதிடப்பட்டது.

விதிமுறைகளின் அடிப்படையில்… தமிழக அரசின் தரப்பில், ‘சென்னையில் 1998-க்குப்பின் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. வரியை உயா்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. மொத்தவிலை குறியீடு, பணவீக்கம், சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளா் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சொத்து வரி உயா்த்தப்பட்டது. கடந்த 1977 முதல் பின்பற்றப்பட்ட நடைமுறையை கடைப்பிடித்தே தற்போது சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது‘ என்று வாதிடப்பட்டது.

இது தொடா்பான ஆவணங்களும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சிகள் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, ‘மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது. எனவே, வரி விதிப்பை வெளிப்படைத் தன்மையுடன், கேள்விகளுக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ள வேண்டும்.

எந்தத் தவறும் இல்லை: நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயா்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. சொத்து வரியை உயா்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை. இந்த அரசாணையின் அடிப்படையில், சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, சொத்து வரி உயா்த்துவது தொடா்பான அரசாணையும், மாநகராட்சி தீா்மானங்களும் செல்லும்’ என தீா்ப்பளித்து உத்தரவிட்டாா்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல்… மேலும் சென்னையில் சொத்து வரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 போ் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் நீதிமன்றம் வந்திருக்காது. ஆட்சேபங்கள் கோரி முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, 2022-2023-ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக்கூறி மனுதாரா்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்து, 2023-2024-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயா்வை அமல்படுத்த உத்தரவிட்டாா்.

சொத்து வரி தொடா்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும்‘ எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMib2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9kZWMvMjgvaGMtdXBob2xkcy10aGUtdG5zLW1vdmUtdG8tZW5oYW5jZS10aGUtcHJvcGVydHktdGF4LTM5NzQ0MjMuaHRtbNIBbGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzI4L2hjLXVwaG9sZHMtdGhlLXRucy1tb3ZlLXRvLWVuaGFuY2UtdGhlLXByb3BlcnR5LXRheC0zOTc0NDIzLmFtcA?oc=5