கடந்தாண்டை போலவே விவசாயிகளிடம் இருந்து நேரடி கரும்பு கொள்முதல்: கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி தகவல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கரும்பு, கடந்தாண்டை போலவே இந்தாண்டும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளதாக உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளின் கோரிக்கையை முதல்வர் பரிசீலனை செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் ஹெக்டர் அளவிற்கு கொள்முதல் நடைபெறவுள்ளது.

மேலும் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் பிற மாநிலங்களில் இருந்து கரும்பை கொள்முதல் செய்யாமல், தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படவுள்ளது. அதில் ஒரு கரும்பு ரூ.33 என 2.19 கோடி கரும்புகள் ரூ. 72 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்ட உள்ளன. மேலும், 20 சதவீதம் வரை அரசு கரும்பை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அதிகாரிகளின் குழுக்கள் மூலம் கொள்முதல் நிலைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjY0MDjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjQwOC9hbXA?oc=5