பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க கோரிய வழக்கு ஜன.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க அரசுக்கு உத்தரவிட கோரிய மனு ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000-ம் உடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக அரசு நல்ல விலைக்கு அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் அதனை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொங்கல் பண்டிகையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் வழங்க கேட்டு டிசம்பர் 24-ம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசரணையை ஜனவரி 2-ம் தேதி(திங்கள் கிழமை)-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjYyNTHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjI1MS9hbXA?oc=5