அடுத்த ஆண்டு முதல்பொங்கல் தொகுப்பில் 2 கரும்புகள் வழங்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

பல்லடம்:

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டி வரும் 31-ந் தேதி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையில் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:- தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில்கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பன்னீர் கரும்பை கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிட கோரி‌ தமிழ்நாடு அரசிற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி நேற்று சென்னை எழும்பூரில் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் பன்னீர் கரும்பை வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , வேளாண்துறை அமைச்சருக்கும், விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வருக்கு எடுத்துச்சென்ற கூட்டுறவுத்துறை செயலாளருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த ஆண்டு முதல் இரண்டு கரும்புகளை வழங்கி கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு உதவ வேண்டும் .நெல்லை கொள்முதல் செய்வது போலவே பன்னீர் கரும்பையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .மேலும் கரும்பை கொள்முதல் செய்து விநியோகம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டதால் வரும் 31ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihwFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vbmV3cy9kaXN0cmljdC90aXJ1cHVyLW5ld3MtZnJvbS1uZXh0LXllYXItMi1jYW5lcy1zaG91bGQtYmUtcHJvdmlkZWQtaW4tcG9uZ2FsLXBhY2thZ2VmYXJtZXJzLWRlbWFuZC01NTQ0NjnSAYsBaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL2Rpc3RyaWN0L3RpcnVwdXItbmV3cy1mcm9tLW5leHQteWVhci0yLWNhbmVzLXNob3VsZC1iZS1wcm92aWRlZC1pbi1wb25nYWwtcGFja2FnZWZhcm1lcnMtZGVtYW5kLTU1NDQ2OQ?oc=5