சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கக்கன் சிலை – கே.எஸ்.அழகிரி திறந்துவைத்தார் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு நிறுவன தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 150 அடி உயர கொடிக்கம்பத்தில், காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றினார்.

அதைத்தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில், தியாகி சத்தியமூர்த்தி சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பி.கக்கனின் மார்பளவு உருவச்சிலையை அவர் திறந்துவைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “சத்தியமூர்த்தி பவனில் கக்கனுக்கு சிலை வைக்கப்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தேன். அந்த பொறுப்பை முன்னாள் செயல்தலைவர் மறைந்த எச்.வசந்தகுமார் எடுத்து இருந்தார். காலத்தின் கோலம் அவர் தவறிவிட்டதால், அந்த நிகழ்வு காலம் தாழ்த்தியது. தற்போது எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அந்த பொறுப்பை ஏற்று கக்கனுக்கு சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. காமராஜரின் மண்ணில், கக்கனுக்கு சிலை திறப்பது என்பது வரலாற்று சிறப்பு மிக்கது” என்றார்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறும்போது, ‘பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தங்களின் குடும்பங்களுக்காகதான் செயல்படுகிறது என்று கொச்சைத்தனமாக பேசி இருக்கிறார். ஆசியாவில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் நேருவும், இந்திராகாந்தியும்தான். ராஜீவ்காந்தி காலத்தில்தான் கம்ப்யூட்டர் துறை வளர்ச்சி அடைந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாக மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என 3 தலைவர்களை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. இவ்வளவு தியாகம் செய்துள்ள எங்களை குறை சொல்லும் ஜே.பி.நட்டாவும், அவரின் தலைவர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு மணி நேரம் சிறை சென்றுள்ளார்களா?” என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், ஹசன் மவுலானா, மாநில துணைத்தலைவர்கள் பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, கக்கனின் மகன்கள் பாக்கியநாதன், சத்தியநாதன், மகள் கஸ்தூரி, மருமகள் சரோஜினி, பேத்தியும், சென்னை போலீஸ் மேற்கு மண்டல இணை கமிஷனருமான ராஜேஸ்வரி, சகோதரர்களின் பிள்ளைகளான இமயா கக்கன், தமிழ்செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9rYWtrYW4tc3RhdHVlLWtzLWFsYWdpcmktaW5hdWd1cmF0ZWQtYXQtY29uZ3Jlc3MtcGFydHktb2ZmaWNlLWluLWNoZW5uYWktODY3NzYz0gF7aHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9rYWtrYW4tc3RhdHVlLWtzLWFsYWdpcmktaW5hdWd1cmF0ZWQtYXQtY29uZ3Jlc3MtcGFydHktb2ZmaWNlLWluLWNoZW5uYWktODY3NzYz?oc=5