சென்னை: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விவகாரம்… எடப்பாடி, போலீஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை கிழக்கு தாம்பரம், இரும்பூலியூர், திலகவதி நகரைச் சேர்ந்தவர் எட்வின் கிறிஸ்டோபர். இவரின் வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் முகநூலைப் பயன்படுத்தி வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று முகநூலில் பரவியது. அந்தப்பதிவை என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் ஷேர் செய்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில் என்னுடைய ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக விசித்திரா என்பவர் மீது என்னுடைய தந்தை முத்து, சென்னை பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகாரளித்திருந்தார். ஆனால் விசித்திரா மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் எடப்பாடி பழனிசாமியின் ஃபேஸ்புக் பதிவு குறித்து என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஓராண்டுக்குப்பிறகு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்து என்னைப் பிடிக்க 12 தனிப்படைகளை அமைத்தனர். தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் என்னுடைய குடும்பத்தினருக்கு தொல்லைக் கொடுத்தனர். அதன்பிறகு போலீஸார் என்னை ஆந்திர மாநிலத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசித்திரா கொடுத்த புகாரின் பேரில் என்னுடைய தந்தை முத்துவின் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் கைது செய்தார்கள். இந்த மனவேதனையில் என்னுடைய தந்தை உயிரிழந்து விட்டார். எனவே, சம்பந்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டர், புகாரளித்த ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் இந்த மனுவில் சேர்த்து அவரையும் விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcmVhbC1lc3RhdGUtYnVzaW5lc3NtZW4tbG9nZ2VkLXBldGl0aW9uLWFnYWluc3QtZWRhcGFkaS1wYWxhbmlzYW150gFvaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvcmVhbC1lc3RhdGUtYnVzaW5lc3NtZW4tbG9nZ2VkLXBldGl0aW9uLWFnYWluc3QtZWRhcGFkaS1wYWxhbmlzYW15?oc=5