கணவனை இழந்த இளம் பெண்களே டார்கெட்… பயந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வாட்ஸ் அப் குழு மூலம் நண்பர்களு… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணவரை இழந்த இளம் பெண்ணுக்கு இரு தினங்களுக்கு முன் அவரது மொபைல் போனில் மர்ம நபர்கள் இருவர் தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் செய்துள்ளனர். இளம் பெண் அந்த எண்ணை தொடர்பு கொண்டு திட்டிய போது இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் அந்த இளம் பெண்ணின் மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் செல்போன் நம்பரை ஆய்வு செய்து சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(37) என்பவரையும் மற்றும் அவரது நண்பரான தி.நகர் வரதராஜன் தெருவை சேர்ந்த மதி (எ) மதியழகன்(35) ஆகிய இருவரை கைது செய்தனர்.

மணிகண்டன் என்பவர் சாலிகிராமம் பகுதியில் கட்டட வேலை செய்து வருகின்றார் என்பதும் அவரது நண்பரான மதியழகன் தி.நகர் பகுதியில் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து அவர்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளனர். கணவனை இழந்த பெண்கள் சிலர் சுயதொழில் செய்வதற்காக தங்களது மொபைல் நம்பரை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை கண்டு அந்த நம்பரை எடுத்து தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் அனுப்பியும் அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்து அவர்களுக்கே அனுப்பி வைத்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

குறிப்பாக மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை கணவனை இழந்த இளம் பெண்களுக்கு அனுப்பி தங்களது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாகவும் மேலும் தவறான தொழில் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டி வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் பயந்து போன சில இளம் பெண்களை மிரட்டி இருவரும் தங்களது ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

மேலும், இவர்களது நண்பர்களை கொண்டு உருவாக்கப்பட்ட whatsapp குழுவில் இவர்கள் இருவரும் அட்மினாக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களின் மொபைல் நம்பரை வாட்ஸ் அப்பில் தங்களது நண்பர்களுக்கு பணத்துக்காக விற்று வந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நண்பர்களின் ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு அதன் மூலம் மிரட்டவும் செய்து உள்ளனர்.

இதே போல சுமார் 20க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்களின் மொபைல் எண்களை வாட்ஸ் அப் குழுவில் பதிந்து தங்களது நண்பர்களுக்கு பணத்துக்காக விற்றதும் தெரியவந்துள்ள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதே போல ஆபாசம் மெசேஜ் மற்றும் புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் ஃபோனை  போலீசார் பார்த்தபோது இருவரின் மொபைல் போன்கள் முழுவதும் இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் இவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் இருந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் அதே வேளையில் whatsapp குழுக்களில் உள்ள இவர்களது நண்பர்கள் யார்? யார்? பெண்களுக்கு பாலியல் மிரட்டல் கொடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரங்கள் அடிப்படையில் இவர்களது நண்பர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvdHdvLWFycmVzdGVkLWZvci10aHJlYXRlbmluZy1hbmQtc2V4dWFsbHktYXNzYXVsdGluZy15b3VuZy13b21lbi04NjQ5MDcuaHRtbNIBdmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL3R3by1hcnJlc3RlZC1mb3ItdGhyZWF0ZW5pbmctYW5kLXNleHVhbGx5LWFzc2F1bHRpbmcteW91bmctd29tZW4tODY0OTA3Lmh0bWw?oc=5