சென்னையில் அனைத்து தெருக்களையும் ஆக்கிரமித்துள்ள தார்சாலைகள் மழைநீரை உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்க பேவர் பிளாக் சாலைகள் அம – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகரம் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 2011ம் ஆண்டு 176 சதுர கிமீ பரப்பிலிருந்து 426 சதுர கி.மீ., பரப்பளவாக மாநகராட்சியின் பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. அப்போது நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதுர கி.மீ., பரப்பில் சராசரியாக 26 ஆயிரம் பேர் வசித்தனர். ஆனால் 2022ம் ஆண்டில் அது 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாநகரில் மக்கள் தொகை பெருக்கம், மக்கள் தொகை அடர்த்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாநகரப் பகுதியில் இருந்த திறந்தவெளி நிலங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. மாநகரமே கான்கிரீட் பகுதியாக மாறிவிட்டது.

தூய்மையைப் பராமரிக்க ஏதுவாக வீட்டு வெளிப்பகுதி முழுவதும் திறந்தநிலம் இன்றி சிமென்ட் பூசப்படுகிறது. சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகின்றன. இப்படி செய்தால் மழைநீர் எங்கேபோகும். வீட்டைச் சுற்றிதான் தேங்கும். கிடைக்கும் மழைநீரில், 90 சதவீதம் நிலத்தடி நீராக மாறாமல் வழிந்தோடி குடியிருப்புகளைச் சூழ்கிறது. பின்னர் கடலில் வீணாகக் கலக்கிறது. இது தான் சென்னையில் மழை காலங்களில் நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை மழைநீர் பூமிக்கு செல்வது வெறும் 3 சதவீத்துக்கும் குறைவாகவே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதுவும் கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம், நீர் உறிஞ்சும் பூங்காக்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு பராமரிப்பு போன்றவற்றால் மட்மே இது சாத்தியமாகிறது. மழைநீர் பூமிக்கு செல்லாததற்கு சென்னை முழுவதுமே சாலைகள் மற்றும் காங்கிரீட்களால் மூடப்பட்டுள்ள தான்.

மழை மூலமாக மட்டுமே நமக்கு நீர்  கிடைக்கும். அதுதான் முக்கிய ஆதாரம். அதனால் மழைநீரை தெருவில் விடாமல்  மக்கள் தங்கள் வீடுகளில் சேமிக்க வேண்டும். இவ்வாறு செய்தாலே, பெருமளவு  நீர் தெருவுக்கு வருவது தடுக்கப்படும். சென்னையில் பெரும்பாலான இடங்கள் கான்கிரீட்டாக மாறிவிட்ட நிலையில், கிடைக்கும் இடங்களிலாவது நிலத்தில் நீர் ஊறுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது பெய்யும் மழையை வைத்து இந்த பிரச்னையை சாதாரணமாக விட்டால் மழை இல்லாத ஆண்டுகளில் மக்கள் தண்ணீருக்காக தவிக்க வேண்டிய நிலை உருவாகிவிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதை மனதில் வைத்து தான் தற்போது சென்னை மாநகராட்சி நிலத்திடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மழைநீர் தேங்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு அங்கு பேவர் பிளாக் சாலைகள் அமைக்க  சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சாலைகளில் குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு பள்ளம் தோண்டும் போதும், பராமரிப்பு பணிகளின் போதும் சாலைகள் சேதமடைகிறது. அந்த இடங்களில் சீரமைப்பு பணி மேற்கொண்டாலும் சாலை குண்டும் குழியுமாகிறது. ஆனால் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது, இதுபோன்ற பணிகள் நடைபெறும் போது அந்த கற்களை பெயர்த்து எடுத்து விட்டு மீண்டும் பதித்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதுபோன்ற சாலைகள் சென்னைக்கு தேவை என்ற வலுவான கருத்து எழுந்துள்ளது. அதன்படியே, சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து தட சாலைகள் பெரும்பாலும் தார்ச் சாலைகளாகவும், உட்புற சாலைகள் தார்ச் சாலைகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் சாலைகளாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த இடங்களில் இதுபோன்ற சாலைகள் அமைத்தால் மழைநீரை பூமியால் உறிஞ்ச முடியும் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலே பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும்
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையை பொறுத்தவரை ஒரு சிறு இடம் இருந்தாலும் அதில் கட்டிடங்கள் கட்டப்பட்டுவிடுகிறது. மிகவும் நெருக்கமான சூழ்நிலையில் மக்கள் வசிக்கின்றனர். அனைத்து தெருக்களையும் தார்சாலைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழைநீர் பூமிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. மழை நேரங்களில் தார் சாலைகளில் தண்ணீர் நிலத்தடியில் இறங்காது. கான்கிரீட் சாலைகளில் ஓரளவு தண்ணீர் இறங்கும். ஆனால், இந்த பேவர் பிளாக் சாலைகளில் நிலத்தடி நீர் முழுமையாக இறங்கும். அதற்கேற்றவாறு கற்கள் பதிக்கப்படும். இந்த சாலைகளின் மீது மழைநீர் தேங்கினால் அவை வேகமாக உறிஞ்சப்படுகிறது.

எனவே, இதுபோன்ற சாலைகளை சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைத்து நிலத்தடி நீர் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்தால் மட்டுமே மழை இல்லாத காலங்களில் சென்னை மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும். எதிர்காலத்தை கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் செ்ன்ை மாகநராட்சி இறங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

2.78 கி.மீ நீளத்திற்கு
முதல்கட்டமாக, 2.78 கி.மீ நீளத்திற்கு ரூ.1.71 கோடி செலவில் பேவர் பிளாக் சாலை சாலைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மணலி மண்டலத்தில் 10 சாலைகளில் 554 மீ நீளத்தில் ரூ.32 லட்சம் செலவிலும், ராயபுரம் மண்டலத்தில் 2 சாலைகள் 165 மீ நீளத்திற்கு ரூ.6 லட்சம் செலவிலும், வளசரவாக்கம் மண்டலத்தில் 3 சாலைகளில் 219 மீ நீளத்திற்கு ரூ.19 லட்சம் செலவிலும், அடையாறு மண்டலத்தில் 3 சாலைகளில் 180 மீ நீளத்திற்கு ரூ.11.23 லட்சம் செலவிலும், பெங்குடி மண்டலத்தில் 1662 மீ நீளத்திற்கு ரூ.101 லட்சம் செலவில் இந்த சாலைகள் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjcwMTPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzAxMy9hbXA?oc=5