Read all Latest Updates on and about Chennai Sangam – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. ஒருங்கிணைக்கிறார்.

தொடர்ந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த இடங்கள் வருமாறு:-

தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலி மாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, ராமகிருஷ்ணா நகர் விளையாட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்.

தினமும் கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக் கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற் பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiL2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS90YWdzL2NoZW5uYWktc2FuZ2Ft0gEA?oc=5