சென்னையில் செவிலியர்கள் போராட்டம் – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த சனிக்கிழமை ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சேலத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும் அதேநேரத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவித்தார். 

இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒப்பந்த செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிக்க | ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVWh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDIvbnVyc2VzLXByb3Rlc3QtaW4tY2hlbm5haS0zOTc3MzkzLmh0bWzSAVJodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIzL2phbi8wMi9udXJzZXMtcHJvdGVzdC1pbi1jaGVubmFpLTM5NzczOTMuYW1w?oc=5