திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

காவிரி பாலம் பராமரிப்பு

திருச்சி மாநகரம்-ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976-ம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள இந்த பாலம் பழுதடைந்ததால், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, அவை மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

போக்குவரத்துக்கு தடை

இந்தநிலையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி ஓயாமரி சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புது காவிரி பாலம், சஞ்சீவி நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களும் இந்த வழியாக செல்வதால் கடந்த ஒரு மாதமாக புது காவிரி பாலம் பகுதியில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையில் நின்று மெதுவாக சென்று வருகின்றன. காலை, மாலை வேளைகளில் ஒரு வாகனம் அந்த பாலத்தை கடந்து செல்ல அரை மணி நேரம் வரை ஆகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

3 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருப்பதாலும், போக்குவரத்து நெரிசலாலும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்போது உள்ள பழைய பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றி, அதில் ஸ்ரீரங்கத்தில் இருந்து கும்பகோணத்தான் சாலை வழியாக வருபவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், சஞ்சீவி நகர் சந்திப்பில் சென்னை செல்லும் வாகனங்களை புதிய பாலம் நோக்கி திருப்பி விட்டு அதை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS92ZWhpY2xlcy1zdHVjay1pbi10cmFmZmljLW9uLXRyaWNoeS1jaGVubmFpLWhpZ2h3YXktODY5NzE20gFmaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS92ZWhpY2xlcy1zdHVjay1pbi10cmFmZmljLW9uLXRyaWNoeS1jaGVubmFpLWhpZ2h3YXktODY5NzE2?oc=5