வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 11,486 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
இதுகுறித்து, சென்னை துறைமுக போக்குவரத்துத் துறையின் தலைவா் கிருபானந்தசாமி கூறியது:-
உள்நாட்டு கட்டுமானத்துறையில் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இந்தியாவில் இயங்கி வரும் இரும்பு உருக்காலைகள் நேரடியாக இரும்பு கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. மேலும், இறக்குமதிக்கான சுங்க வரியில் பெருமளவு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடா்ந்து நடப்பு நிதியாண்டில் சென்னை துறைமுகத்தில் மட்டும் இதுவரை சுமாா் 13 லட்சம் டன் இரும்பு கழிவுகள் 35 கப்பல்கள் மூலம் இறக்குமதியாகி உள்ளன. நடப்பு நிதியாண்டிற்குள் மேலும் 15 கப்பல்களில் சுமாா் 6 லட்சம் டன் இரும்பு கழிவுகள் இறக்குமதியாக உள்ளன. 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இரும்பு கழிவுகளை
வெளிநாடுகளில் இருந்து தொடா்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. இவற்றை இருப்பு வைப்பதற்காக சென்னை துறைமுகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி, கும்மிடிப்பூண்டி, கோவை, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்கு ரயில்கள், லாரிகள் மூலம் இரும்பு கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
கையாள்வதில் புதிய சாதனை: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (டிச. 31) ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த எம். வி. பேன் ஆம்பா் என்ற கப்பலிலிருந்து 11, 486 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு முன்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியன்று எம்.வி. குளோரியஸ் சன்ஷைன் என்ற கப்பலில் இருந்து 9 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை கையாண்டது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
துறைமுக தலைவா் பாராட்டு:
இந்தச் சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகமை நிறுவனமான பென் லைன் ஏஜென்சிஸ், இறக்குமதியாளா் பி.எம்.பி. ஸ்டீல்ஸ் நிறுவனத்தைச் சாா்ந்த அதிகாரிகளை சென்னை எண்ணூா் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா் என்றாா் கிருபானந்த சாமி.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiqARodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzAzLyVFMCVBRSU4NyVFMCVBRSVCMCVFMCVBRiU4MSVFMCVBRSVBRSVFMCVBRiU4RCVFMCVBRSVBQSVFMCVBRiU4MS0lRTAlQUUlOTUlRTAlQUUlQjQlRTAlQUUlQkYlRTAlQUUlQjUlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlODgtJUUwJUFFJTk1JUUwJUFGJTg4JUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFFJUIzJUUwJUFGJThEJUUwJUFFJUI1JUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlQTQlRTAlQUYlODElRTAlQUUlQjElRTAlQUYlODglRTAlQUUlQUUlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtJUUwJUFFJUFBJUUwJUFGJTgxJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUFGLSVFMCVBRSU5QSVFMCVBRSVCRSVFMCVBRSVBNCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0zOTc3NzMxLmh0bWzSAaUEaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMy9qYW4vMDMvJUUwJUFFJTg3JUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJTgxLSVFMCVBRSU5NSVFMCVBRSVCNCVFMCVBRSVCRiVFMCVBRSVCNSVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4OC0lRTAlQUUlOTUlRTAlQUYlODglRTAlQUUlQUYlRTAlQUUlQkUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUUlQTQlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSVCMSVFMCVBRiU4OCVFMCVBRSVBRSVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUYlODElRTAlQUUlQTQlRTAlQUUlQkYlRTAlQUUlQUYtJUUwJUFFJTlBJUUwJUFFJUJFJUUwJUFFJUE0JUUwJUFFJUE5JUUwJUFGJTg4LTM5Nzc3MzEuYW1w?oc=5