சென்னையில் மீண்டும் மழைநீர் வடிகால் பணிகள் துவக்கம்! – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பணிகளை, மாநகராட்சி மீண்டும் துவக்கி உள்ளது. ‘சிங்கார சென்னை’ போன்ற திட்டங்களில் இரண்டாம் கட்டமாக, 27 கி.மீ., பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், 2021 மழை வெள்ள பாதிப்புக்குப் பின், பல்வேறு நடவடிக்கைகளை அரசும், மாநகராட்சியும் மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் கமிட்டி பரிந்துரைப்படி, மழைநீர் வடிகால் கட்டமைப்பை மாநகராட்சி துவக்கியது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் பகுதி – 1 மற்றும் பகுதி-2ன் கீழ், 277.04 கோடி ரூபாய் மதிப்பில், 60.83 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

மேலும், வெள்ள நிவாரண நிதியின் கீழ், 295.73 கோடி ரூபாய் மதிப்பில் 107.57 கி.மீ., துாரத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 27.21 கோடியில், 10 கி.மீ., துாரத்திற்கும் பணிகள் துவக்கப்பட்டன.
மூலதன நிதியின் கீழ், 8.26 கோடி ரூபாய் மதிப்பில், 1.05 கி.மீ., துாரம், உலக வங்கி நிதி உதவியின் கீழ், விடுபட்ட இடங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பில், 44.88 கி.மீ., துாரம் என மொத்தம், 728.24 கோடி ரூபாய் மதிப்பில், 224.33 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.
இத்திட்டங்களின் கீழ், முன்னுரிமை அடிப்படையில் 100 கி.மீ.,க்கு, மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன.
கடந்த 2022 நவ., மற்றும் டிச., மாதங்களில், மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. அதேநேரம், தேவையான இடங்களில் மழை பொழிவு இல்லாத நேரங்களில், மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் மேற்கொள்ள, மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது.மேலும், மழைநீர் தேங்கிய சாலைகளில், 50க்கும் மேற்பட்ட ‘ரெடிமேட்’ கால்வாயையும் மாநகராட்சி அமைத்தது.

இதன் காரணமாக, கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரே நாளில் அதிக கனமழை பெய்தும், சென்னையில் மழைநீர் தேக்கம் அதிகளவில் ஏற்படவில்லை. இதற்காக, பொதுமக்கள் பலர், மாநகராட்சிக்கு பாராட்டை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, மழைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மீண்டும் துவக்க, ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழக அரசின் அனுமதிக்குப் பின், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 27 கி.மீ., துாரத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து, கொசஸ்தலை ஒருங்கிணைந்த வடிகால் பணி, கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் பணி, விடுபட்ட மற்றும் தாழ்வான பகுதிகளிலும், நிலப்பரப்பிற்கு ஏற்றாற்போல் வடிவமைப்பில், மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

– நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


‘சாய்ராம்’ கல்லுாரி பட்டமளிப்பு விழா ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் பங்கேற்பு

முந்தய


கடந்தாண்டு ரூ.2.97 கோடி மதிப்பு பொருட்கள் மீட்பு! தீயணைப்பு வீரர்கள் துரிதத்தால் சாத்தியம்

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMDk3ODHSAQA?oc=5