சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்கள் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ்: அதிகாரிகள் முடிவு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நீண்ட காலம் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, வீட்டில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்யும் வகையில் ஜப்தி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்டவை முக்கிய பங்கு வசிக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் நிதியில் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள், வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் பலர் முறையாக சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு வருவாய் குறைந்து, வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தி, சொத்து வரி, தொழில் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

மேலும், நீண்ட காலமாக பல லட்சம் மதிப்பில் வரி பாக்கி வைத்துள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, வரி பாக்கி வைத்துள்ள கட்டிடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு பேனர் வைக்கப்படும் என்றும், அதை மீறியும் நிலுவை வரியினை உடனடியாக செலுத்தாவிடில் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படும். இதேபோல், உரிமம் பெறாமல் கடை நடத்தும் நபர்கள், மாநகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி வைத்துள்ள நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சொத்து வரி மூலம் அரையாண்டுக்கு தலா ரூ.700 கோடி என ரூ.1,400 கோடி வரை மாநகராட்சிக்கு சொத்து வரி வருவாய் கிடைக்கும். 12 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தி வரும் நிலையில் ஒரு சிலர் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக, ரூ.5 முதல் 25 லட்சம் வரை வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அவர்களிடம் சொத்து வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுபோன்று சொத்துவரி செலுத்தாமல் இழுத்தடித்து வருபவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்கள் மற்றும் அவர்களது வீட்டின் முன்பு சொத்து வரி செலுத்த வேண்டிய தொகை குறிப்பிடப்பட்டு விளம்பர பலகையும் வைக்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்ப வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் செலுத்த வேண்டிய தொகைக்கு நிகராக வீட்டில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் ரூ.66.37 கோடி சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து பலர் இந்த ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டில் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு தனி வட்டி விதிக்கப்படும்.

பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளவர்களுக்கு முதல் கட்டமாக ஜப்தி நோட்டீஸ் விரைவில் வழங்கப்படும். அதற்குள் செலுத்தி விட்டால் ஜப்தி தவிர்க்கப்படும். இதையும் மீறி வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யப்படும். அடுத்த வாரம் முதல் இந்தப் பணிகளை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னையில் மொத்தம் ரூ.66.37 கோடி சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து பலர் இந்த ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* 12ம் தேதி வரை அவகாசம்
சென்னையில் சொத்து வரியை ஒவ்வொரு  அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீதம் அல்லது  ரூ.5,000 வரை மாநகராட்சி சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும். அதற்கு பின்பு, சொத்து வரி செலுத்துவோருக்கு, 2 சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த  நிதியாண்டில், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12ம்  தேதி வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.

* இணையத்தில் வெளியீடு
சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின்  பட்டியல் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி ரூ.25  லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்ததாத 38 நபர்கள், ரூ.10 லட்சம்  முதல் ரூ.25 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 140 நபர்கள், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்து வரி செலுத்தாத 321 நபர்களின் பட்டியல் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjc5NzLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzk3Mi9hbXA?oc=5