158 பயணிகளுடன் வந்தபோது சென்னை விமானத்தில் திடீர் கோளாறு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து பயணிகள் விமானம் தினமும் இரவு 11.05 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.55 மணிக்கு சென்னை வந்து சேரும்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் சென்னைக்கு விமானம் புறப்பட தயாரானது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பின்னர் அதை சரி செய்து இரவு 11.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக நள்ளிரவு 11.51 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.

அந்த விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருக்கும்போது மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, சென்னை மற்றும் குவைத் விமான கட்டுப்பாட்டு அறைகளுக்கு அவசரமாக தகவல் கொடுத்தார்.

திரும்பிச் சென்றது

உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும் குவைத்துக்கே திருப்பிச் சென்று தரையிறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த விமானம் மீண்டும் குவைத்துக்கே திரும்பிச் சென்று குவைத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.

குவைத் விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணியில் என்ஜினீயர்கள் குழுவினர் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலை 6.55 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை வந்து சேர வேண்டிய பயணிகள் விமானம் வரவில்லை. தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குவைத்தில் இருந்து விமானத்தில் சென்னை வரும் பயணிகளை, வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் பரிதவித்தனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMic2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9zdWRkZW4tcHJvYmxlbS1pbi1jaGVubmFpLWZsaWdodC13aGVuLWl0LWFycml2ZWQtd2l0aC0xNTgtcGFzc2VuZ2Vycy04NzI1MDHSAXdodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL3N1ZGRlbi1wcm9ibGVtLWluLWNoZW5uYWktZmxpZ2h0LXdoZW4taXQtYXJyaXZlZC13aXRoLTE1OC1wYXNzZW5nZXJzLTg3MjUwMQ?oc=5