கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சி சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றினர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அமைப்பு, பாதைகள் உள்ளிட்டவை ஆராய ஜனவரி 22ம் தேதி நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக உத்தரவிட்டனர்.

மேலும், ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உளிட்டோரின் வாதத்திற்காக விசாரணையை வரும் 20தேதி ஒத்திவைத்ததுடன் பிறழ் சாட்சி அளித்த சுவாதி குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiwFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvZ29rdWxyYWotbXVyZGVyLWNhc2UtYWNjdXNhdGlvbi1maWxlZC1hZ2FpbnN0LWZhbHNlLXdpdG5lc3Mtc3dhdGhpLWNoZW5uYWktaGlnaC1jb3VydC1vcmRlcnMtODczMzgw0gGPAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvZ29rdWxyYWotbXVyZGVyLWNhc2UtYWNjdXNhdGlvbi1maWxlZC1hZ2FpbnN0LWZhbHNlLXdpdG5lc3Mtc3dhdGhpLWNoZW5uYWktaGlnaC1jb3VydC1vcmRlcnMtODczMzgw?oc=5