சென்னை தீவுத்திடலில் 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை தீவுத்திடலில் 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2022 – 2023 சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர், மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர், டாக்டர். பி. சந்தரமோகன் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தையும், 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2022 – 2023  -ஐ யொட்டி அமைக்கப்பட்ட அரசுத்துறை அரங்கங்களையும் அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையுரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

முதலமைச்சர் ஆக்கப்பூர்வ பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில்  பல்வேறு ‘திட்டங்களின் செயல் மாதிரி’-களுடன் இந்தாண்டிற்கான ‘ Rethinking Tourism என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அரசு துறையின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக சுமார் 5,000 பேரும்.

மறைமுகமாக சுமார் 25,000 பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.  70,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 32க்கும் மேற்பட்ட இதுவரை பார்த்திடாத, விளையாடி மகிழ்ந்திடாத விளையாட்டு சாதனங்கள்கள் (Techno Jump, Screen Tower, Sunami, Chapsuel, Swing Chair, Wind Mill and China Salambo) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் மக்கள் மனதை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இரயில், பனிக்கட்டி உலகம். மீன் காட்சியகம், பேய் வீடு. பறவைகள் காட்சி, 3D தியேட்டர். போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, Coffee House, Quick Bytes மற்றும் Barbeque Counter போன்ற கூடுதல் வசதிகளுடன் கூடிய நவீன சமையலறை  உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு 10,000 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வாகனங்களில் அமர்ந்தவாறே உணவு அருந்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறை வருங்காலங்களில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சாகசச் சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா,  மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் (Medical & Wellness) சுற்றுலா, வணிக (MICE) சுற்றுலா, கிராமிய மற்றும் மலை தோட்டப்பயிர்  சுற்றுலா, கேரவன் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா,  உணவுச் சுற்றுலா என  பத்து சுற்றுலாப் பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன.  தேசிய அளவிலான சராசரி விகிதத்தை விட அதிகமான ரயில் இணைப்புகளை தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 4000 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நன்கு மேம்படுத்தப்பட்ட ரயில் பாதைகள் மாநிலத்தின் அனைத்து இடங்களையும் இணைக்கின்றன. தமிழ்நாட்டின் 66,039 கி.மீ கொண்ட நன்கு மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்புகள் மாநிலத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இணைக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். அவர்கள் செலவிடும் திறன் மற்றும் தமிழ்நாட்டில் தங்கும் காலத்தை அதிகரிக்கவும் சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டிற்கான சுற்றுலாப் பயணிகள் வருகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள். பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி,  கனடா, சீனா, மலேசியா. ரஷ்யா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சாரம், கலை. கட்டடக்கலை, பாரம்பரியம். கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற சிறப்பம்சங்களை காட்சிப்படுத்துவதற்காக ஆண்டு முழுவதும் பொருட்காட்சிகள் மற்றும் விழாக்கள் சுற்றுலாத் துறையின் மூலம் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் சுற்றுலாத் தொழில் புரிவோர்களான தங்கும் விடுதியாளர்கள். பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள் இணை பங்கேற்பாளர்களாக சுற்றுலாத் துறையுடன் இணைந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணச் சந்தைகளில் கலந்துகொள்கின்றனர்.

இச்சந்தைகளில் பல்வேறு சுற்றுலாத் தொழில் புரிவோர்கள் தங்கள் வணிகம் சார்ந்த சந்திப்புகளை சுற்றுலா அரங்கில் நடத்துகின்றனர். இதன் விளைவாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதளம், தமிழ்நாட்டின் சுற்றுலா குறித்த தகவல்கள், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த தளமாகும். இந்த இணைய தளத்தில் தமிழக சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் 75 விளம்பர காணொளிகள் தமிழக சுற்றுலாத் துறையால் வெளியிடப்பட்டன.

மனதை மயக்கும் நிலப்பரப்புகள், அழகிய அற்புதமான கலாச்சார பாரம்பரியம். கட்டடக்கலை, பிரமிப்பூட்டும் கடற்கரைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய கலை வடிவங்கள். புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை வீடியோக்கள் மூலம் உலகெங்கும் காட்சிப்படுத்துவதன் மூலம் தமிழகத்தை சிறந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவிலும் உலகெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டிலிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் விதமாக விளக்கமளிக்கும்  யூ-ட்யூப் காணொலிகள், ‘நெடிய  சுற்றுலாக்களைக் கொண்ட மாநிலமாக’ தமிழ்நாட்டை உயர்த்த  வெளியிடப்பட்டுள்ளன.

கொச்சின், கோவா, சூரத் மற்றும் வதோதரா விமான நிலையங்களில் ஒளிதிரைகளில் தமிழ்நாடு சுற்றுலா விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு  வருகின்றன. சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள்/இடங்களை கண்டறிந்து மேம்படுத்த, “தமிழ்நாடு சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் தீவிரமாகப் பங்காற்றும் பல்வேறு சுற்றுலாப் பங்குதாரர்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 53 ஓட்டல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் 28 ஓட்டல்களை நேரடியாக நிருவகித்து வருகின்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம் மற்றும் குற்றாலம், வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பிரபலமான ஆன்லைன் பயண திரட்டிகள் (OTAs) இணையதளங்களான Makemytrip, Goibibo, Booking.com, etc., உடன் இணைந்து தமிழ்நாடு ஓட்டல்களின் வருவாயை மேம்படுத்த வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாவின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் அதிகரித்து,  தொடர்ந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக நிலைநிறுத்த கடினமாக பணியாற்றுவோம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ராயபுரம் மண்டல குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, தேனாம்பேட்டை மண்டலக்குழுத்தலைவர் எஸ்.மதன்மோகன், 60 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் லி.பாரதிதேவி, சுற்றுலாத்துறை இணைஇயக்குநர் புஷ்பராஜ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg1NDbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODU0Ni9hbXA?oc=5