சென்னையில் 2 மேம்பாலங்களை இடிக்க முடிவு- 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்டப்படும் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2-ம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் 2026-ம் ஆண்டு நிறைவடையும். இந்த வழித்தடத்தில் 50 ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

இந்த வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக அடையாறு ஆற்றின் கீழேயும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இந்த மெட்ரோ ரெயில் பாதையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக சென்னை அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலமும், ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட உள்ளன.

இந்த 2 மேம்பாலங்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்டப்படும். அடையாறு சந்திப்பில் பாலம் இடிக்கும் பணிகளை தொடங்குவதற்கு முன்பு போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் அதற்கு இணையாக இருவழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

அதன் பிறகு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். அந்த பணிகள் முடிந்த பிறகு இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் அடையாறு சந்திப்பில் 4 வழிச்சாலை மேம்பாலம் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

இந்த மேம்பாலம் அடையாறை பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கிறது. அடையாறு டெப்போ மெட்ரோ ரெயில் நிலையம் 15 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படுகிறது.

இது மாதவரம் போன்ற தொலை தூர பகுதிகளை பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. நிறுவனங்களுடன் இணைக்கும்.

மேலும் ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி 50 சதவீதம் அளவுக்கு இடிக்கப்பட உள்ளது. இந்த இடிக்கப்பட்ட பகுதி மீண்டும் கட்டப்படும். இந்த பாலம் இடிக்கப்பட்ட பிறகு இங்கு போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆரம்பத்தில் அடையாறை திருவான்மியூருடன் இணைக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு தற்காலிக இரும்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்காலிக பாலத்தை உருவாக்கி அகற்றுவதால் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் அதற்கு கான்கிரீட் கட்டுமானம் போலவே செலவு அதிகமாகும்.

எனவே அதற்கு இணையாக புதிய மேம்பாலத்தை கட்ட திட்டமிட்டோம். தற்போதுள்ள மேம்பாலத்தின் சில தூண்கள் அகற்றப்பட்டு தற்போதைய வாகன போக்குவரத்து இணையான மேம்பாலத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtZGVjaWRlZC10by1kZW1vbGl0aW9uLTItYnJpZGdlcy1pbi1jaGVubmFpLTU1Nzc0ONIBZ2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLWRlY2lkZWQtdG8tZGVtb2xpdGlvbi0yLWJyaWRnZXMtaW4tY2hlbm5haS01NTc3NDg?oc=5