சென்னை கட்டடங்கள் 23.2 கோடி டன் கரியமில வாயுவை வெளிவிடும்! – தினமணி

சென்னைச் செய்திகள்

2019 – 2040 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில், சென்னையில் உள்ள கட்டடங்கள் 23.2 கோடி டன் கரியமில வாயுவை (கார்பன் -டை- ஆக்ஸைடு) வெளியிடும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சென்னை போன்ற நகரத்தில் உருவாகும் ஒட்டுமொத்த கரியமில வாயுவில் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் 25% கரியமில வாயுவை வெளியிடுவதாகத் தெரியவந்துள்ளது. 

கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், இரும்பு (ஸ்டீல்), அவைகளைக் கொண்டுவருவதற்கான போக்குவரத்து, கட்டுமானத்துக்குத் தேவையான மின்சார பயன்பாடு, அதனால் இயக்கப்படும் சாதனங்கள், போன்றவை கரியமில வாயு வெளியாவதற்கான முக்கிய காரணங்கள்.

நகரமயமாக்கல் மிக வேகமாக நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் கட்டடங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. 

கட்டுமானத் துறை மூலம் கரியமில வாயு வெளியாவது குறித்து தரவுகள் அடிப்படையில் மூன்று கட்ட ஆய்வுகளை சென்னை ஐஐடி குழு மேற்கொண்டது.

முதல் கட்டத்தில் நில அடிப்படையிலான கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் நகரமயமாக்கல் மூலம் வெளியாகும் கரியமில வாயுவை புரியவைப்பதற்காக வாழ்க்கை சுழற்சி முறைகளை பகுப்பாய்வு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக கரியமில வாயு வெளியாவதைக் குறைக்கும் நோக்கத்தில், கட்டுமான பணிகளுக்குத் தேவையான மாற்று மூலப்பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

வாழ்க்கை சுழற்சி முறைகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம், 2040ஆம் ஆண்டு சென்னை நகரத்திலுள்ள கட்டடங்கள், கட்டுமானப் பணிகள் மூலமும் அதற்குத் தேவையான ஆற்றல்கள் மூலமும், 23.1 கோடி டன் கரியமில வாயுவை வெளியிடும் என கணக்கிடப்பட்டது. 

மேலும், கட்டுமானங்களுக்கு கரியமில வாயுவை வெளியிடாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதையும் இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. 

தூய்மையான ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கட்டுமான முறைகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமும் கரியமில வாயு வெளியாகும் அளவு 2019 – 2040 காலகட்டத்தில் 11.5 கோடி டன்னாக குறையும் எனவும் ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikAFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzA2L2NoZW5uYWktYnVpbGRpbmdzLWVtaXQtMjMyLW1pbGxpb24tdG9ucy1vZi1jYXJib24tZGlveGlkZS0zOTc5NzQ1Lmh0bWzSAY0BaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMy9qYW4vMDYvY2hlbm5haS1idWlsZGluZ3MtZW1pdC0yMzItbWlsbGlvbi10b25zLW9mLWNhcmJvbi1kaW94aWRlLTM5Nzk3NDUuYW1w?oc=5