ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் – மாலைமலர் (Maalaimalar)

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அன்றைய அரசினால் ஏப்ரல் 28ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டு 2300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அன்று முதல் அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு என்பது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பேரிடர் முடிவுக்கு வந்த சூழலில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த நிலையில் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் அவர்கள் யாருக்கும் பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்கின்ற வகையில், ஒரு மாற்று யோசனையின்படி மாவட்ட வாரியாக இருக்கிற அமைப்புகளின் சார்பில் டிபிஎச்இ மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய துறைகளில் இருக்கிற காலி பணி இடங்களை இவர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என அறிவுத்தினார். அந்த வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுவரை 14000 ரூபாய் தற்காலிக பணிநியமனத்திற்காக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும், அது மட்டுமல்லாது ஏற்கனவே இருக்கிற தற்காலிக பணி நியமனங்களின் மூலம் அவர்களில் பெரும் பகுதியானவர்கள் தலைமை மருத்துவமனைகளில்தான் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள்கூட பல்வேறு மனுக்களின் வாயிலாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பக்கத்திலேயே பணி மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வந்தார்கள். தற்காலிக செவிலியர்களை இடமாற்றம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாவட்ட சுகாதார சங்கம் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டு, மிகப்பெரிய அளவு பணி பாதுகாப்பு இருக்கும் என்கிற அளவில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போல் DMS ஒப்பந்த பணியாளர்கள் என்ற அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். தொடச்சியாக இரண்டு நாட்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள். இன்று சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஏறக்குறைய 2 மணி நேரம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு தனித்தனியே கொடுக்கப்பட்ட வேலைக்குரிய ஆணையையும் எங்களிடம் காட்டினார்கள். அதிலே மிக தெளிவாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தற்காலிகமாக பணி ஆணை தரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நானும் துறையின் செயலாளரும் என்எச்எம் இயக்குனர், திட்ட இயக்குனர், டிபிஎச், டிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள் அவர்களிடம் பேசினோம். அவர்கள் என்எச்எம் நிதி ஆதாரத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தின் பணி நியமனங்கள் வேண்டாம். இங்கு டிஎம்எஸ் ஒப்பந்த அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணி அது, இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அது முடியாது என்ற வகையில் அலுவலர்கள் எடுத்து சொன்னார்கள். அவர்களும் பிடிவாதமாக மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக வேண்டாம் என்று சொன்னார்கள்.

அதற்காக அவர்கள் சொன்ன காரணம், என்எச்எம் நிதி ஆதாரம் இல்லாமல் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் எங்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் மூலமும் அந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, நீங்கள் விண்ணப்பியுங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இதில் இருக்கிற சட்டப்பூர்வான விஷயங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டிருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL21hLXN1YnJhbWFuaWFuLXNheXMtbm8tcG9zc2liaWxpdHktb2YtbWFraW5nLWNvbnRyYWN0LW51cnNlcy1wZXJtYW5lbnQtNTU4MjM20gF4aHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL21hLXN1YnJhbWFuaWFuLXNheXMtbm8tcG9zc2liaWxpdHktb2YtbWFraW5nLWNvbnRyYWN0LW51cnNlcy1wZXJtYW5lbnQtNTU4MjM2?oc=5