சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள்… கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கர் கைது! – Vikatan

சென்னைச் செய்திகள்

செம்மரக்கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர் சென்னையில் நடத்தி வரும் ஃபர்னிச்சர் கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து செம்மரம் கடத்தியது தொடர்பாக பாஸ்கரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

யார் இந்த பாஸ்கர்?

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன். இவரின் மனைவி இளவரசி. இந்தத் தம்பதியின் மகன் விவேக் ஜெயராமன். இவர் தனியார் டி.வி தொலைகாட்சி, சினிமா தியேட்டர் பிசினஸ்களை செய்து வருகிறார். இளவரசியும், விவேக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் சசிகலாவோடு குடியிருந்தவர்கள்.

விவேக், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் கீர்த்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு அப்போது ஜெயலலிதா செல்லவில்லை. அதற்கு காரணமாக விவேக்கின் மாமனார் பாஸ்கர் மீது ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தது காரணமாக சொல்லப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், பாஸ்கரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்துள்ளனர். விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்பட்ட பாஸ்கர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சசிகலாவின் உறவினர் பாஸ்கரை கட்டை பாஸ்கர் என்றே சிலர் அழைப்பதுண்டு. அவர் கைது செய்யப்பட்ட தகவல் சசிகலா குடும்பத்தினரிடைய பரபரப்பாக பேசப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXGh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvcmVkLXdvb2Qtc211Z2dsaW5nLWNhc2Utc2FzaWthbGEtcmVsYXRpb24tYmFza2FyLWFycmVzdGVk0gFmaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvcmVkLXdvb2Qtc211Z2dsaW5nLWNhc2Utc2FzaWthbGEtcmVsYXRpb24tYmFza2FyLWFycmVzdGVk?oc=5