பழைய பொருட்களை வாங்கும் சென்னை மாநகராட்சி…புதிய முயற்சிக்கு காரணம் இதுதான்..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசடைந்து மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சு பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது.

அந்த காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து முதல் சாலையோர போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது.

இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி முதன் முறையாக, புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். அந்த பொருட்களை பெறும் பணி நாளை முதல் துவங்குகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறுகையில்,”சென்னையில் ஒன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள, அனைத்து வார்டுகளிலும் வரும் 14ம் தேதி போகி பண்டிகைக்காக, பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜனவரி 7 முதல் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நாளை முதல் வழங்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள, இன்சினரேட்டர் ஆலையில் எறியூட்டப்படும். இந்த ஆலையில் எறியூட்டும் பொருட்களில் புகை மண்டலமாக வெளியே வராது. சாம்பாலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், சென்னையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கி, மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvYmhvZ2ktZmVzdGl2YWwtY2hlbm5haS1jb3Jwb3JhdGlvbi1idXlzLXNlY29uZGhhbmQtZ29vZHMtZnJvbS1wZW9wbGUtODY4NzA3Lmh0bWzSAXpodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9iaG9naS1mZXN0aXZhbC1jaGVubmFpLWNvcnBvcmF0aW9uLWJ1eXMtc2Vjb25kaGFuZC1nb29kcy1mcm9tLXBlb3BsZS04Njg3MDcuaHRtbA?oc=5