போகி: பழைய பொருள்களை வாங்கும் சென்னை மாநகராட்சி! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி அலுவலகம் (கோப்புப் படம்)

சென்னையில் பழைய பொருள்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

போகி பண்டிகையையொட்டி பழைய பொருள்கள் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஒன்று முதல் 15 மண்டலங்களில் உள்ள, அனைத்து வார்டுகளிலும் வரும் 14ஆம் தேதி போகி பண்டிகைக்காக, பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஜனவரி 7 முதல் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் எரிக்க நினைக்கும் பொருட்களை மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நாளை முதல் வழங்கலாம்.

படிக்க | செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சு; தூண்டுதலால் போராட்டம்: மா.சுப்பிரமணியன்

இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள, இன்சினரேட்டர் ஆலையில் எறியூட்டப்படும். இந்த ஆலையில் எரியூட்டுவதால் புகை வெளியே வராது. சாம்பல் மட்டுமே வெளியே வரும். அந்த சாம்பலும் கற்கள் செய்ய பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDcvY2hlbm5haS1jb3Jwb3JhdGlvbi1idXlzLW9sZC1pdGVtcy1haGVhZC1vZi1iaG9naS1mZXN0aWF2YWwtMzk4MDIxNS5odG1s0gF0aHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDcvY2hlbm5haS1jb3Jwb3JhdGlvbi1idXlzLW9sZC1pdGVtcy1haGVhZC1vZi1iaG9naS1mZXN0aWF2YWwtMzk4MDIxNS5hbXA?oc=5