மாரத்தான் ஓட்டம்: நேப்பியர் பாலம்-பெசன்ட் நகர் இடையே நாளை போக்குவரத்து மாற்றம் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கிமீ, 32 கிமீ, 21 கிமீ மற்றும் 10 கிமீ) மாரத்தான் ஓட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்றடையும்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* மத்திய கைலாசிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல். பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும்.

அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL21hcmF0aG9uLXJ1bm5pbmctbmFwaWVyLWJyaWRnZS10by1iZXNhbnQtbmFnYXItdHJhZmZpYy1jaGFuZ2UtdG9tb3Jyb3ctNTU4MDY40gF4aHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL21hcmF0aG9uLXJ1bm5pbmctbmFwaWVyLWJyaWRnZS10by1iZXNhbnQtbmFnYXItdHJhZmZpYy1jaGFuZ2UtdG9tb3Jyb3ctNTU4MDY4?oc=5