ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக கடத்தி வரப்பட்டது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

புதுக்கோட்டை

கஞ்சா சிக்கியது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவணம் கைகாட்டி அருகே காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட எல்லைப்பகுதியான இந்த இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நிறுத்தியிருந்த ஒரு காரை சோதனையிட்டனர்.

அந்த காரின் பின்பகுதி மற்றும் உள்ளே பண்டல், பண்டல்களாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 212 கிலோ கஞ்சா அதில் இருந்தது. அதனையும், அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது:-

ரெயில் மூலம் கடத்தல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கஞ்சாவை காரில் சென்னையில் இருந்து கடத்தி வந்துள்ளனர். இதில் தொடர்புடையவர்களை ஆங்காங்கே போலீசார் கண்காணித்தனர். சம்பவத்தன்று அந்த கார், தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமநாதபுரம் அல்லது மதுரை செல்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் பின்தொடருவதை அறிந்த அந்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது. காரை ஒருவர் மட்டுமே ஓட்டி வந்துள்ளார். அவரும் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார். அவருடன் மற்றொருவர் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

போலீஸ் ஸ்டிக்கர்

கஞ்சா வழக்கில் தஞ்சாவூரில் இருவரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தான் இந்த கார் சிக்கியது. இந்த காரின் பதிவெண் போலியானதாக உள்ளது. காரின் மேல் பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காரின் என்ஜின் எண் வைத்து அதன் உரிமையாளர் யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டினால் காரை சோதனையிட மாட்டார்கள் என கருதி அந்த கும்பல் ஒட்டியிருக்கலாம் என தெரிகிறது.

இவ்வாறு கூறினர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9pdC13YXMtc211Z2dsZWQtZnJvbS1hbmRocmEtdGhyb3VnaC1jaGVubmFpLTg3NTEwMNIBXmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvaXQtd2FzLXNtdWdnbGVkLWZyb20tYW5kaHJhLXRocm91Z2gtY2hlbm5haS04NzUxMDA?oc=5