விடுதியில் இரும்பு கதவு விழுந்து சென்னை மாணவர் பலி- கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டம் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

திருவள்ளூர்:

சென்னை, அயனாவரம், ஹவுசிங் போர்டு பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி துர்கா, மகன்கள் ஜீவா, நித்தீஷ் (வயது10) மற்றும் உறவினர்கள் 30 பேருடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அவர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். சாமி தரிசனம் முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

அப்போது விடுதி அறையின் அருகே சிறுவன் நித்தீஸ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அங்கிருந்த இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பலியான நித்தீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவன் சாவில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திருவள்ளூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL2Rpc3RyaWN0L3RhbWlsLW5ld3MtdGlydXZhbGx1ci1zdHVkZW50LWRlYXRoLXBvbGljZS1pbnF1aXJ5LTU1ODcwN9IBZ2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9kaXN0cmljdC90YW1pbC1uZXdzLXRpcnV2YWxsdXItc3R1ZGVudC1kZWF0aC1wb2xpY2UtaW5xdWlyeS01NTg3MDc?oc=5