சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை – 55 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி 55 வயதுடைய நபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். பின்னர் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோடு வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சாட்சிகளையும் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 7-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த 55 வயதுடைய நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்த போலீஸாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvY291cnQtc2VudGVuY2VkLTIwLXllYXJzLXByaXNvbi10by1hLXBlcnNvbi1pbi1hLXBvY3NvLWNhc2XSAWhodHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS9jb3VydC1zZW50ZW5jZWQtMjAteWVhcnMtcHJpc29uLXRvLWEtcGVyc29uLWluLWEtcG9jc28tY2FzZQ?oc=5