அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம் – தினமணி

சென்னைச் செய்திகள்

அரக்கோணம் அருகே நடைமேடை 1, 2-க்கு பிரியும் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த வழியே சென்ற ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, அரை மணி நேர தாமதத்துக்குப் பின்னா் புறப்பட்டுச் சென்றன.

அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு அருகே சென்னை செல்லும் ரயில் பாதையில் நடைமேடை 1 மற்றும் 2-க்கும் இடையே ரயில்கள் பிரிந்து செல்லும் தண்டவாளப் பகுதியில் திங்கள்கிழமை காலை விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதை அந்த வழியே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, அந்த வழியே வர இருந்த ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயில், மதுரை- சண்டிகா் அதிவிரைவு ரயில், திருவனந்தபுரம்-சென்னை அதிவிரைவு ரயில், வேலூா் கண்டோன்மென்ட்- சென்னை கடற்கரை மின்சார ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதேபோல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய புகா் மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டன.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே செல்ல இருந்த சென்னை – திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், சென்னை – பெங்களூரு டபுள்டெக்கா் அதிவிரைவு ரயில், சென்னை – பெங்களூரு பிருந்தாவன் அதிவிரைவு ரயில், சென்னை – அரக்கோணம் புகா் மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால், கல்லூரிக்குச் செல்வோா், பணிகளுக்குச் செல்வோா் உள்ளிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த தண்டவாள பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உடனடியாக அந்த விரிசலை தற்காலிகமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணி அரை மணி நேரம் நடைபெற்றது. பின்னா், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக இயக்கப்பட்டன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijARodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9yYW5pcGV0LzIwMjMvamFuLzA5LyVFMCVBRSU4NSVFMCVBRSVCMCVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4QiVFMCVBRSVBMyVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlODUlRTAlQUUlQjAlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUYlODctJUUwJUFFJUE0JUUwJUFFJUEzJUUwJUFGJThEJUUwJUFFJTlGJUUwJUFFJUI1JUUwJUFFJUJFJUUwJUFFJUIzJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVCMCVFMCVBRSVCRiVFMCVBRSU5QSVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQjAlRTAlQUUlQUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFFJUE0JUUwJUFFJUFFJUUwJUFGJThELTM5ODEzNTkuaHRtbNIBiQRodHRwczovL20uZGluYW1hbmkuY29tL2FsbC1lZGl0aW9ucy9lZGl0aW9uLWNoZW5uYWkvcmFuaXBldC8yMDIzL2phbi8wOS8lRTAlQUUlODUlRTAlQUUlQjAlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUYlOEIlRTAlQUUlQTMlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtJUUwJUFFJTg1JUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJTk1JUUwJUFGJTg3LSVFMCVBRSVBNCVFMCVBRSVBMyVFMCVBRiU4RCVFMCVBRSU5RiVFMCVBRSVCNSVFMCVBRSVCRSVFMCVBRSVCMyVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQjUlRTAlQUUlQkYlRTAlQUUlQjAlRTAlQUUlQkYlRTAlQUUlOUElRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUIwJUUwJUFFJUFGJUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThELSVFMCVBRSVBNCVFMCVBRSVCRSVFMCVBRSVBRSVFMCVBRSVBNCVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0zOTgxMzU5LmFtcA?oc=5