சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற சென்னை பக்தர் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

திருவனந்தபுரம்:

சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து தற்போது மகரவிளக்கு திருவிழா நடந்து வருகிறது.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதனை காண இப்போதே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும் அங்கு தற்காலிக ஆஸ்பத்திரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சன்னிதானத்தில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவருடன் வந்தவர்கள் அவரை அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் சென்னை, மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 74) என தெரியவந்தது.

இதுபோல விருதுநகர் மாவட்டம் தம்பாபிள்ளி பகுதியை சேர்ந்த முருகன் (62) என்பவரும் நேற்று சன்னிதானத்தில் தரிசனத்திற்கு காத்திருந்தார். அப்போது அவரும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இருவரின் உடல்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கேரள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சன்னிதானத்தில் சாமி தரிசனத்திற்கு வந்த தமிழக பக்தர்கள் இறந்த சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL25hdGlvbmFsL3R3by1kZXZvdGVlcy1kZWF0aC1pbi1zYWJhcmltYWxhLTU1OTYzNtIBVWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9uYXRpb25hbC90d28tZGV2b3RlZXMtZGVhdGgtaW4tc2FiYXJpbWFsYS01NTk2MzY?oc=5