சென்னையில் 6 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் செல்லும் வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் நிரம்பிவிட்டன.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் 18-ந்தேதி மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் 2100 அரசு விரைவு பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை யொட்டி கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கே.கே.நகர் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் செல்கின்றன.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, அரியலூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கோவை, பெங்களூரு, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட அரசு பஸ்கள், அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் ஆகியவை தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது.

இந்த பஸ்கள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் செல்லும். பயணிகளின் வசதிக்காக தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் இருந்து இணைப்பு பஸ்கள் ஊரப்பாக்கத்துக்கு இயக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பஸ்கள் வடபழனி, கே.கே.நகர், கிண்டி, கத்திப்பாரா, ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கார் உள்ளிட்ட இதர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம், பெருங்களத்தூர் வழிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக அல்லது ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3BvbmdhbC1zcGVjaWFsLWJ1c2VzLWZyb20tNi1sb2NhdGlvbnMtaW4tY2hlbm5haS13aWxsLXJ1bi1mcm9tLXRvbW9ycm93LTU1OTM3ONIBeWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS9wb25nYWwtc3BlY2lhbC1idXNlcy1mcm9tLTYtbG9jYXRpb25zLWluLWNoZW5uYWktd2lsbC1ydW4tZnJvbS10b21vcnJvdy01NTkzNzg?oc=5