துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை: சென்னை … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகவுள்ளது.

2 முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 2 படங்களுக்கும் பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் இந்த 2 படங்களும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்ட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதள பக்கங்களிலும், துணிவு படத்தை வெளியிட 2,754 இணையதள பக்கங்களிலும் வெளியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார்கள்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி இரண்டு படங்களையும் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHA6Ly93d3cuZGluYWthcmFuLmNvbS9OZXdzX0RldGFpbC5hc3A_TmlkPTgyOTcwNNIBAA?oc=5