சிவகாசியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க ஏற்பாடு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

விருதுநகர்

சிவகாசி,

பொங்கல் பண்டிகையையொட்டி சிவகாசியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 5 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்து இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை

தொழில்நகரமான சிவகாசியில் தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகிறார். அதேபோல் இங்குள்ள கல்லூரிகளில் முக்கிய நகரங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்து இருந்தது.

இந்தநிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிவகாசியில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து தற்போது சிவகாசியில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு கூடுதல் பஸ்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சிறப்பு பஸ்கள்

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளர் நாகராஜன் கூறியதாவது, பொங்கலையொட்டி தொலைத்தூர பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிவகாசியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 5 பஸ்களும், கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு தலா 1 சிறப்பு பஸ்களும் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதை தவிர்த்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் தேவைப்படுகிறதோ அந்த ஊர்களுக்கு உடனடியாக பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பஸ்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்கள் சிவகாசியில் இருந்து 12,13,14 ஆகிய தேதிகளிலும் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9wcm92aXNpb24tb2YtYWRkaXRpb25hbC1idXNlcy1mcm9tLXNpdmFrYXNpLXRvLWNoZW5uYWktODc3MTI10gFpaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9wcm92aXNpb24tb2YtYWRkaXRpb25hbC1idXNlcy1mcm9tLXNpdmFrYXNpLXRvLWNoZW5uYWktODc3MTI1?oc=5