சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்ற சிறப்பு முகாம்: வருகிற 21ம் தேதி நடக்கிறது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை, : குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கான சிறப்பு முகாம் வருகிற 21ம் தேதி சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் நடக்கிறது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும்  ஒவ்வொரு  வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி  மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 21ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும்  புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள்  புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் சிறப்பு முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzAxODPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMDE4My9hbXA?oc=5