ஆவினில் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பெற்றதாக 25 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் பணிநியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் புகாரை அடுத்து கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

இதனை எதிர்த்து 25 ஊழியர்களை சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் பணிநீக்கம் செய்ய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம்  உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிநீக்க தொடர்பாக எந்த நோட்டீசும் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனை அடுத்து ஆவினில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடைவிதித்தனர். மேலும், ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzAwNTLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMDA1Mi9hbXA?oc=5