சென்னை-மைசூர் செல்லும் வந்தே பாரத் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க அதிகாரி ஆய்வு – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

ஜோலார்பேட்டை:

சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக மைசூர் வரை வந்தே பராத் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் தற்போது மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களை போல் பொதுவான வேகத்தில் சென்று கொண்டுள்ளது. இதனால் வந்தே பாரத் ரெயிலின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் சென்னை கோட்ட பொது மேலாளர் கணேஷ் நேற்று தனி சிறப்பு ரெயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.

அப்போது ரெயில்வே துறையின் பல்வேறு அதிகாரிகளுடன் அவர் தண்டவாளங்கள், பிளாட்பாரம், பழைய ரெயில்வே பணிமனை, ஆர்.ஆர்.ஐ. கேபின், பிளாட்பாரங்களில் உள்ள நிழற்கூடம் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் 4-வது, 5-வது பிளாட்பாரம் நடைமேடையில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் நடைமேடையில் ரெயில்வே அலுவலர்கள் செல்ல தனி வழியாகவும், பொதுமக்கள் கடந்து செல்ல தனி நடைமேடையும் புதிய பாலம் அமைத்து மேம்பால பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்து பிரிவு அலுவலர்களிடம் பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே பணிமனையை ஆய்வு செய்து சரக்கு ரெயில்கள் வருவதற்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரெயில் பாதையையும் மற்றும் பழுதான சரக்கு ரெயில் வண்டிகள் பழுது சரி பார்த்த பின்பு கடந்து செல்லும் ரெயில் பாதையையும் ஆய்வு செய்தார்.

சென்னை-மைசூர் வந்தே பாரத் ரெயில் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களை போன்று பொதுவான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ரெயிலின் வேகத்தை அதிகரிக்கவும் ரெயில் பாதைகள் உறுதியாகவும் தரமாகவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.

அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் சேகர், துணை மேலாளர் கணேசன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆசைத்தம்பி, மற்றும் சென்னை கோட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtY2hlbm5haS1teXNvcmUtdmFuZGUtYmhhcmF0LWV4cHJlc3MtY2hlY2stdHJhY2stcXVhbGl0eS1hdC1qb2xsYXJwZXQtNTYwMTk00gGBAWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLWNoZW5uYWktbXlzb3JlLXZhbmRlLWJoYXJhdC1leHByZXNzLWNoZWNrLXRyYWNrLXF1YWxpdHktYXQtam9sbGFycGV0LTU2MDE5NA?oc=5