சென்னை: கழிவறைக்குச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்த இளைஞர்! – கையும் களவுமாக சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை, வேப்பேரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கவிதா (பெயர் மாற்றம்) (32) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 10.1.2023-ம் தேதி கவிதா, கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது கழிவறையின் ஜன்னல் பகுதியில் யாரோ மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுப்பதை கவிதா பார்த்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்தவர், சத்தம் போட்டிருக்கிறார். அதனால் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து கவிதா, தன்னுடன் வேலைப்பார்ப்பவர்களிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி கமிஷனர் ஹரிகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது ஜன்னல் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவர் செல்போனோடு ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து இளைஞரின் அடையாளத்தின் அடிப்படையில் விசாரித்தபோது புளியந்தோப்பைச் சேர்ந்த பாலாஜி (24) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்த செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தபோது அதில் கழிவறைக்கு செல்லும் பெண்களின் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து போலீஸார் , பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “கைதுசெய்யப்பட்ட பாலாஜியும் அதே நிறுவனத்தில்தான் வேலைப்பார்த்து வந்திருக்கிறார். சபல புத்திகாரணமாக கழிவறைக்குச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பாலாஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. தொடர்ந்து பாலாஜியின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMic2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUveW91dGgtYXJyZXN0ZWQtZm9yLXRha2luZy12aWRlby1pbi13b21lbnMtd2FzaHJvb20tb2YtcHJpdmF0ZS1jb21wYW55LWluLWNoZW5uYWnSAX1odHRwczovL3d3dy52aWthdGFuLmNvbS9hbXAvc3RvcnkvbmV3cy9jcmltZS95b3V0aC1hcnJlc3RlZC1mb3ItdGFraW5nLXZpZGVvLWluLXdvbWVucy13YXNocm9vbS1vZi1wcml2YXRlLWNvbXBhbnktaW4tY2hlbm5haQ?oc=5