பொங்கல் விழா களை கட்டியது: 8 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணம்; கரும்பு, மஞ்சள், ஆடைகள் விற்பனை அமோகம் – தினமணி

சென்னைச் செய்திகள்

பொங்கல் விழா களை கட்டிய நிலையில் சென்னையிலிருந்து ரயில்கள், பேருந்துகள் மூலமாக 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பண்டிகையைக் கொண்டாட வெளியூா்களுக்குச் சென்றுள்ளனா்.

அதேவேளையில் பொதுமக்கள் பொங்கல் விழாவுக்கான பூஜை பொருள்கள், கரும்பு, மஞ்சள், புத்தாடைகள் வாங்க கடைகளில் குவிந்தனா்.

தமிழக மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை விழா, போகியுடன் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாள்கள் உற்சாகமாக கொண்டாடப்படும். அதன்படி சனிக்கிழமை காலை போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் காப்பு கட்டி விளக்கேற்றி மக்கள் வழிபட்டனா்.

இதையடுத்து பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல், செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் என பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசின் சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 12-ஆம் தேதி முதல் பொதுமக்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா். அன்றைய தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதாவது தினசரி இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன், சென்னையில் இருந்து 4,449 சிறப்பு பேருந்துகள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து என 6,183 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவற்றில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. தனியாா் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக சுமாா் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த சில நாள்களாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்தனா். இதனால் சென்னை தியாகராயநகா், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.

பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவா். இதனால் சனிக்கிழமை முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனா். ஒவ்வொரு பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், ஒரு கரும்பு ரூ.30 முதல் ரூ. 50 வரையிலும், மஞ்சள் கொத்து ரூ.20 முதல் ரூ.40 வரையிலும் விற்பனையானது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihQJodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzE1LyVFMCVBRSVBQSVFMCVBRiU4QSVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQjUlRTAlQUUlQkYlRTAlQUUlQjQlRTAlQUUlQkUtJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4LSVFMCVBRSU5NSVFMCVBRSU5RiVFMCVBRiU4RCVFMCVBRSU5RiVFMCVBRSVCRiVFMCVBRSVBRiVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0zOTg0MzUyLmh0bWzSAYICaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMTUvJUUwJUFFJUFBJUUwJUFGJThBJUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVCNCVFMCVBRSVCRS0lRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlODgtJUUwJUFFJTk1JUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlGJUUwJUFFJUJGJUUwJUFFJUFGJUUwJUFFJUE0JUUwJUFGJTgxLTM5ODQzNTIuYW1w?oc=5